ஆப்கானிஸ்தானில் கழுதை மீது வெடிபொருட்களை நிரப்பி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 நேட்டோ படையினர் கொல்லப்பட்டனர்.
நேட்டோ படையினர் ஆப்கானை விட்டு வெளியேறி வரும் பட்சத்தில், அவர்கள் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காபூலுக்கு தெற்கே வார்துக் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தினர்.
இதில் மூன்று நேட்டோ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இதுகுறித்து மாகாண அதிகாரி அதுல்லா கோக்யானி கூறுகையில், கழுதையின் மீது விவசாயி போன்று வேடமிட்டு அமர்ந்து வந்த தீவிரவாதி, தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினான்.
இதில், சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 3 நேட்டோ படைவீரர்களும், தீவிரவாதியும் பலியாயினர்.
தீவிரவாதிகள் எந்த ரூபத்தில் எப்படி தாக்குவர் என்று தெரியாமல் நேட்டோ படையினர் எப்போதும் உஷாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலரும் படுகாயமடைந்தனர் என்று தெரிவித்தார்.
மேலும், மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் சயேதாபாத் அருகே சாலையோர கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 4 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்தனர்.
கழுதை மீது வந்து தற்கொலை படை தாக்குதல் நடத்திய சம்பவம் நேட்டோ படையினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.