ரோட்டோரமாகவும், மரத்தடியிலும் சிறுநீர் கழிக்கும் வழக்கம் உள்ளவர்கள் செல்வதற்கான ஒரு இடமல்ல கென்யத் தலைநகர் நைரோபி.
ஏனென்றால் அங்கே இந்த காரியத்தை செய்பவர், ஆறு மாதம் வரையில் சிறையில் அடைபட நேரிடும்.
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களைப் பிடித்து இழுத்துக்கொண்டு நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான விசேட படை ஒன்றை நாட்டின் தலைநகர் நைரோபியின் அதிகாரிகள் அமைத்துள்ளனர்.
ஒரு காலத்தில் கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் வர்த்தக மையமாக விளங்கிய நைரோபி, இழந்துவிட்ட பொலிவை மீட்டெடுப்பது இத்திட்டத்தின் நோக்கம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஊரைச் சுத்தப்படுத்தும் காரியத்தில் நைரோபி வறிந்துகட்டி இறங்கியுள்ளது.
நெடி வீசும் இடமாக நகரை மாற்றிவரும் ஒரு நாற்றமான பிரச்சினையை சமாளிப்பதற்கென ஒரு பக்கம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இன்னொரு பக்கம் விசேடப் படை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவிடங்களில் சிறுநீர் கழிக்கும் ஆசாமிகளை பிடிப்பதற்காக குறிப்பிட்ட இடங்களில் வெளித்தெரியாதபடிக்கு கண்காணிப்பு காமெராக்கள் வைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
விசேடப் படை தனது பணியை ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நூற்றுக்கும் அதிகமான நபர்கள் பொதுவிடங்களில் சிறுநீர் கழிக்கும்போது பிடிபட்டுள்ளனர்.
இவர்கள் எல்லாம் நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்டு பொதுமக்களுக்கு கஷ்டம் தந்ததாக இவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பொதுவிடத்தில் சிறுநீர் கழிக்கின்ற வழக்கத்துக்கெதிரான இந்த நடவடிக்கையை நகர மக்கள் வரவேற்கின்றனர் என்றாலும், அரசாங்கத்திடம் இருந்து மேலும் எதிர்பார்க்கிறார்கள். மேம்பட்ட கழிப்பிட வசதிகள் வேண்டுமென அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஊரை அசுத்தப்படுத்துகின்றவர்களின் சாக்குபோக்கை செவிமடுக்க தாங்கள் தயாராக இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
கொண்டுவரப்பட்டுள்ள விதியை மீறுபவர்கள் ஐந்து டாலர்கள் முதல் 14 டாலர்கள் வரையிலான அபராதம் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் சிறை செல்ல வேண்டும் என்று புதிய சட்டம் சொல்கிறது.
நைரோபியை தூய்மையாக்கும் பெரிய திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே, நாட்டின் அதிபர் உஹுரு கென்யாட்டாவும் நைரோபி ஆளுநருமாகச் சேர்ந்து துப்புரவு தினம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் நகரவாசிகள் மாதத்தில் ஒரு நாள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு நகரைத் தூய்மையாக்கும் நடவடிக்கைகளில் உதவலாம் என்றுள்ளது. -BBC