துபாயில் உள்ள பர்ஜ் கலிபா என்னும் 828 மீற்றர் உயரமுடைய வணிக வளாகமே தற்போது உலகிலேயே உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பெற்று விளங்குகின்றது.
இதனைக் கட்டி முடிப்பதற்கு ஐந்து ஆண்டுக் காலம் ஆனநிலையில், இதனை முறியடிக்கும் விதமாக தற்போது சீனாவில் 838 மீற்றர் உயரமுள்ள கட்டிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதன் கட்டுமான வேலைகள் கடந்த 20ம் திகதி தொடங்கியது.
ஸ்கை சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடம் மத்திய சீனாவில் உள்ள சங்க்ஷா என்ற இடத்தில் கட்டப்பட உள்ளது.
அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் பத்தே மாதங்களில் இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று இந்த வேலையில் ஈடுபட்டுள்ள பிராட் குரூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மதிப்பு 1.46 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இந்த வேகம் சீனாவின் நிபுணர்களிடமும், இணையதள உபயோகிப்பாளர்களிடமும் தீவிர எதிர் விளைவுகளைத் தோற்றுவித்துள்ளது.
குறைந்த காலத்தில் இவ்வளவு பெரிய திட்டத்தை எப்படி முடிக்கமுடியும் என்ற வினா அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. டிரெய்லர் வீடுகளின் பெருந்தொகுப்பு என்று மற்றொருவர் இத்திட்டத்தை விமர்சித்துள்ளார்.
எனினும், பிற்காலத்தில் இதுபோன்ற உயரமான கட்டிடங்கள் விரைவாக முடிக்கப்படுவதற்கு இந்தக் கட்டிடம் ஒரு முன்மாதிரியாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சன் சிட்டி தவிர சீன அரசினால் ஏராளமான உயரமான கட்டிட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் உயரமான 541 மீற்றரைவிட உயரமான கட்டிடங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன என்று சீனாவின் கட்டிடக்கலை அமைப்புக்குரிய இணையதளத்தின் 2012ம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கின்றது.