தீபாவளியைக் கொண்டாட இந்திய மாணவர்களுக்கு சற்றுநீண்ட விடுமுறை கொடுக்கப்பட வேண்டும் என்ற அரசாங்க உத்தரவை சில பல்கலைக்கழகங்கள் புறக்கணிப்பதாக மனித உரிமைக்கட்சி(எச்ஆர்பி) கூறுகிறது.
எச்ஆர்பி தலைமைச் செயலாளர் பி.உதயகுமார், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எழுதியுள்ள திறந்த மடலில், ஹரி ராயா, சீனப் புத்தாண்டு, கிறிஸ்மஸ் போன்ற விழாக்காலங்களில் கொடுக்கப்படும் சலுகைகள் இந்து மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை என்றும் ஒவ்வோர் ஆண்டும் இப்பிரச்னை திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கிறது என்றும் குறை கூறியுள்ளார்.
யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா(யுகேஎம்), இந்திய மாணவர்களுக்கு வகுப்புகளினின்றும் விலக்களிக்கிறதே தவிர அதிகாரப்பூர்வ விடுமுறை வழங்கவில்லை என்றாரவர்.
“இதனால் இந்திய மாணவர்கள் மூன்றுநாள் படிப்பைத் தவறவிடும் நிலை ஏற்பட்டுள்ளது”, என்று உதயகுமார் கூறினார்.
“யுகேஎம் தவிர்த்து சரவாக்கில் தீபாவளிக்குப் பொதுவிடுமுறை இல்லை என்பதால் யுனிமாஸ், யுஎம்எஸ் போன்ற பல்கலைக்கழகங்களில் தீபாவளியன்றும் விரிவுரைகள் உண்டு என்று அங்குள்ள இந்திய மாணவர்கள் குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்”, என்றாரவர்.
ஜூலை 27-இல், நஜிப் யுனிவர்சிடி மலாயாவில் 1மலேசியா இந்திய மாணவர் இயக்கத்தைத் தொடக்கிவைத்தபோது பல்கலைக்கழகங்கள் இந்து பண்டிகைகளையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று பணிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 15-இல், உயர்கல்வி அமைச்சு, இந்திய மாணவர்களுக்குக் கூடுதல் விடுப்புக்காலம் வழங்கப்படுவதற்கேற்ப வகுப்புகள் மற்றும் தேர்வு அட்டவணையைத் திருத்தி அமைக்குமாறு கேட்டுக்கொண்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
அந்தச் சுற்றறிக்கையில் அக்டோபர் 26-இல் கொண்டாடப்படும் தீபாவளிக்காக அக்டோபர் 25-இலிருந்து 28-வரை இந்திய மாணவர்களுக்கு நீண்ட விடுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்து மாணவர்களுக்கு அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்றுவர போக்குவரவு வசதிகள் செய்துகொடுக்கப்படும், சைவ உணவுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நஜிப் அளித்த வாக்குறுதிகளையும் பல்கலைக்கழகங்கள் நிறைவேற்றவில்லை என்ற புகாரும் வந்திருப்பதாக உதயகுமார் குறிப்பிட்டார்.
“இதெல்லாம், ‘அரசாங்கக் கொள்கை நன்று ஆனால் அமலாக்கம்தான் சரியில்லை’ என்று கூறப்படுவதற்காக நடத்தப்படும் அரசியல் தந்திரமா?”, என்றும் அவர் வினவினார்