பிரிட்டனில் குடியேற விண்ணப்பம் செய்த சுமார் 100 பேர், போர் குற்றத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு பிபிசிக்கு அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான், இரான், இராக், லிபியா, ருவாண்டா, செர்பியா மற்றும் இலங்கையைச் சேரந்த சுமார் 100 பேர், போர் குற்றங்களோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்துக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களில் பலர், ஏற்கனவே பிரிட்டனில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
போர் குற்றவாளிகளுக்கு புகலிடம் கொடுக்கும் நாடாக பிரிட்டன் மாறக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் போர் குற்றங்கள் தொடர்பில் சந்தேகிக்கப்படுபவர்களை வழக்கு விசாரணைக்காக அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுப்பவதிலும் பல சிக்கல்கள் உள்ளன.
பல சமயங்களில, திருப்பி அனுப்பப்படும் நபர்கள் சித்ரவதைக்குள்ளாகலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவை நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், சந்தேக நபர்கள் மீது பிரிட்டனிலேயே வழக்கு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோருகின்றனர்.
கடந்த ஜனவரி 2012 ஆம் ஆண்டில் இருந்து 15 மாதங்களுக்கு, போர் குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் 800 பேர் குறித்து உள்துறை அமைச்சு ஆய்வு நடத்தியது.
இதில் பிரிட்டிஷ் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த 99 பேரின் விண்ணப்பங்களை நிராகரிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டுக்கும் 2012 ஆம் ஆண்டுக்கும் இடையே போர் குற்றத்தோடு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 700 பேர் பிரிட்டனின் குடிவரவு அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஐக்கிய ராஜ்ஜியதக்தில் இருக்கும் போர் குற்றவாளிகள் தொடர்பில் அரசு இன்னமும் தகவல்களைத் தரவேண்டும் என்பதைத்தான் இந்தச் செய்தி உணர்த்துவதாக இனப் படுகொலையை தடுப்பதற்கான நாடாளுன்றக் குழுவின் தலைவரான மைக்கேல் மெக்கான் கூறியுள்ளார்.
அதே நேரம் போர் குற்றம் தொடர்பிலான வழக்குகளை விசாரிக்க தமக்கு கூடுதல் வளங்கள் தேவை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ருவாண்டாவில் வழக்கு விசாரணைக்காக அனுப்பப்படவிருந்த 4 பேரை, உயர் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது. அவர்கள் அங்கே போனால், நியாயமான விசாரணை கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக நீதிமன்றம் கூறியது. இது போன்ற வழக்குகளில் நாடுகடத்தும் நடவடிக்கைகள் தோற்றால், சந்தேக நபர்களுக்கு எதிராக ஐக்கிய ராஜ்ஜியத்தில் வழக்குகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பாடுபடும் ஏஜிஸ் அமைப்பின் ஜேம்ஸ் ஸ்மித் கேட்டுள்ளார். -BBC