இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின், 12வது அதிபராக, ஆக்ராவில் பிறந்த, மம்நூன் ஹுசைன், 73, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அதிபர், ஆசிப் அலி சர்தாரியின் பதவி காலம், செப்., 8ல் முடிகிறது. இதையடுத்து, நேற்று, புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. ஆளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், ஜவுளி வர்த்தகர், மம்நூன் ஹுசைன், அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.
பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆதரவாளரான, ஹுசைன், 1999ம் ஆண்டு, சிந்து மாகாண கவர்னராக இருந்தார். இவர், இந்தியாவின், உ.பி., மாநிலம் ஆக்ராவில் பிறந்தவர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின், தேரிக் -இ- இன்சாப் கட்சி சார்பில், முன்னாள் நீதிபதி வாஜுதீன் அகமது, அதிபர் தேர்தலில், ஹுசைனை எதிர்த்து போட்டியிட்டார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட ரசா ரபானி, தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதை கண்டித்து, போட்டியிலிருந்து வாபஸ் பெற்றார்.
இதையடுத்து, மம்நூன் ஹுசைனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. நேற்று காலை துவங்கிய அதிபர் தேர்தலில், ஹுசைனுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன.
இதையடுத்து, அவர், பாகிஸ்தானின், 12வது அதிபராக அறிவிக்கப்பட்டார். பாகிஸ்தானில் இதுவரை பதவி வகித்த, 11 அதிபர்களில், ஐந்து பேர், ராணுவ தளபதிகளாக இருந்தவர்கள். இவர்களில், நான்கு பேர், ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர்கள்.