ஜெர்மனியில், வீட்டில் புகை பிடிக்கும் போது, அந்தப் புகை வீட்டை விட்டு வெளியேறி அடுக்குமாடிக் குடியிருப்பின் பொது இடங்களுக்குப் பரவினால், புகை பிடித்தவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்று நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.
ஜெர்மன் நகரான டசல்டார்பில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கும் 75 வயதான ப்ரிட் ஹெல்ம் அடோல்ப் , தனது வீட்டை முற்றிலுமாக சீல் வைத்தால் தவிர, புகை வெளியே வருவதைத் தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறுகிறார்.
ஆனால் நீதிமன்றமோ, அவர் புகைத்து வெளியே விடும் புகை, அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடிப்படிகள் இருக்கும் பகுதியில் குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களால் நுகர முடிகிறது என்று , குடியிருப்பின் உரிமையாளர் மற்றும் பிற குடியிருப்புவாசிகளின் வாதத்தை ஏற்றுக்கொண்டது.
ஜெர்மனியில் புகைப்பதற்கு எதிராக நிலவுவதாகக் கூறப்படும், கடுமையான மற்றும் சர்வாதிகாரமான மனோநிலைக்கு எதிராக புகை பிடிப்பவர்களால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. -BBC