உலகில் முதல்நாடாக உருகுவே கஞ்சாவுக்கு சட்ட அனுமதி அளிக்கிறது

marijuanaஉலகில் கஞ்சாவை உற்பத்தி செய்யவும் விற்கவும் பயன்படுத்தவும் சட்டபூர்வமாக அனுமதிக்கும் நாடாக உருகுவே மாறவுள்ளது.

கஞ்சாவை (மரிஹுவானா) சட்டபூர்வமாக்குவதற்கான சட்ட மசோதாவுக்கு உருகுவே நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை அங்கீகாரம் அளித்துவிட்டது.

அடுத்தபடியாக, செனட் சபையும் அங்கீகரித்தவுடன் சட்டம் அமலுக்கு வந்துவிடும்.

இந்த சட்டத்தின்படி, கஞ்சாவை விற்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே இருக்கும்.

அத்தோடு, கஞ்சாவின் இறக்குமதி,ஏற்றுமதி, பயரிடல், அறுவடை மற்றும் அதன்மூலம் உருவாகும் போதைப்பொருட்களின் தயாரிப்பு, களஞ்சியப்படுத்தல், வர்த்தக விளம்பரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும் அரசின் கீழ்தான் வரவுள்ளன.

புதிய சட்டப்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் மாதத்திற்கு 40 கிராம் வரை கஞ்சா வாங்கமுடியும்.

அதுவும் சிறப்பு அனுமதிபெற்ற மருந்தகங்களில் மட்டும் தான் விற்கப்படும்.

அதேபோல, வீட்டில் 6 செடிகள் வரை வளர்க்கவும் அனுமதி உண்டு.

ஆனால், வெளிநாட்டவர்களுக்கு இந்த அனுமதி கிடையாது.

நாடாளுமன்றத்தில் 13 மணிநேரம் நடந்த சூடான வாதப்பிரதிவாதங்களுக்குப் பின்னர் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் காரர்கள் கொள்ளை லாபம் பார்ப்பதை தடுக்கவும் வேறு மோசமான போதைப் பொருள் பாவனையாளர்களை கஞ்சாவை நோக்கித் திருப்பவும் இந்த சட்டம் உதவும் என்று அதிபர் ஹோஸே முஹீகாவின் அரசாங்கம் வாதிடுகின்றது.

லத்தீன் அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல் காரர்களின் போர் நடக்கும் நாடுகளுக்கு ஒரு முதற்கட்ட பரீட்சார்த்த முயற்சியாக இது அமையலாம் என்று அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். -BBC