எவெரெஸ்ட் மலையேற புதிய விதிகளை நேபாளம் அமல்படுத்துகிறது

everestஉலகின் மிக உயரமான சிகரமான எவெரஸ்டில் ஏற எடுக்கப்படும் முயற்சிகளை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவிருப்பதாக நேபாள சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

முதன் முறையாக, எவெரெஸ்டின் கீழ்தள முகாமில் அரசுக் குழு ஒன்று நிலை நிறுத்தப்பட்டு, அது மலையேறுபவர்களுக்கு உதவுதல், மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தல் , சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற வேலைகளைக் கவனிக்கும்.

இந்த ஆண்டு எவெரெஸ்ட் சிகரத்துக்கருகில் நெரிசல் ஏற்பட்டதாக எழுந்த புகார்கள் மற்றும் ஐரோப்பிய மலையேறிகளுக்கும் உள்ளூர் ஷெர்பாக்களுக்கும் இடையே நடந்த மோதல் ஆகிய சம்பவங்களை அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது.

மலையேறும் பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கிறார்கள். இந்த புதிய விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு எவெரெஸ்ட் உச்சிக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் இடையூறுகள் காரணமாக தாங்கள் இரண்டரை மணி நேரங்கள் கியூவில் காத்திருக்க நேர்ந்ததாக சில மலையேறிகள் புகார் கூறியிருந்தனர்.

தற்போது அமலில் இருக்கும் விதிமுறைகளின்படியே, ஒவ்வொரு மலையேறும் குழுவுடனும் ஒரு அரசு அதிகாரி தொடர்பு அதிகாரியாக இருக்கவேண்டும்.

ஆனால் இது நடைமுறையில் அமல்படுத்தப்படுவதில்லை. இவ்வாறு மலையேறும் குழுவுடன் இருக்கவேண்டிய அதிகாரி, காட்மாண்டுவை விட்டே வெளியேசெல்வதில்லை. எனவே இந்த மலையேறும் பயணங்கள் ஒழுங்குபடுத்தப்படுவதில்லை.

இவ்வாறு ஒழுங்குபடுத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கூட அபூர்வமாக அந்தக் குழுக்களுடன் சென்றால், அவர்கள் அந்தக்குழுக்களுக்கு பொறுப்பாக இருக்கிறார்களே தவிர, அரசுக்குப் பொறுப்பாக செயல்படுவதில்லை என்று .பூர்ண் சந்திர பட்டராய் என்ற சுற்றுலாத்துறை அதிகாரி கூறுகிறார்.

இது தவிர, மலையேறுபவர்கள், மலையேறிய பின்னர், அங்கு விநோதமான சாதனைகளைப் படைக்க முயல்வதும் இந்த புதிய விதிமுறைகளின்கீழ் ஒழுங்குபடுத்தப்படும் என்கிறார் நேபாள மலையேறும் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின், ஆங் ஷெரிங் ஷெர்பா

“ கடந்த காலங்களில் மலையேறுபவர்கள் தாங்கள் சாதனைகளைப்படைக்கப்போவதாக முன்னதாகவே சொல்லாமல், மலையேறிய திரும்பி வந்த பின், தாங்கள் புதிய சாதனைகளை படைத்த்தாக கூறும் சம்பவங்கள் நிக்ழந்திருகின்றன”, என்கிறார் ஆங் ஷெரிங் ஷெர்பா

தற்போது மலையேறுபவர்கள், எவெரெஸ்ட் உச்சியை அடைந்தபின்னர், அங்கு தலைகீழாய் நிற்பது, உடைகளை களைந்து நிர்வாணமாக நிற்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதை சாதனையாய்க் காட்டுகிறார்கள்.

இது போன்ற சில நடவடிக்கைகள் எவெரெஸ்ட் சிகரத்தின் மதிப்பை குலைப்பதாக இருக்கிறது என்றும் ஷெர்பா கூறுகிறார்.

ஆனால் புதிய விதிகள் வந்தாலும், எவெரெஸ்ட் உச்சியில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிப்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருக்கும் என்று இந்த பயண ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

மலையேறுபவர்கள் , உச்சிக்கு சென்ற பின், விதிகளை மீறினால், எவெரெஸ்ட் கீழ் தளத்தில் இருக்கும் அதிகாரிகளால் , உடனே மேலே ஏறி இதையெல்லாம் தடுக்க முடியாது என்கிறார் நேபாள மலையேற்றப் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் தற்போதைய ஸிம்பா சங்பூ ஷெர்பா. -BBC