பீஜிங் : உலகின் மிக உயரமான இடத்தில் சீன அரசு, விமான நிலையத்தை அமைத்து வருகிறது.கட்டுமான பணியில் சீனா, உலகின் முதலிடத்தை வகித்து வருகிறது.
திபெத்தை தனி நாடாக அறிவிக்கக்கோரி, புத்த மதத்தலைவர் தலாய் லாமா தலைமையில், நீண்ட நாட்களாக போராட்டம் நடக்கிறது. சீன அரசை எதிர்த்து, நூற்றுக்கும் அதிகமான புத்த துறவிகள், திபெத் விடுதலைக்காக, தீக்குளித்து உயிர் துறந்துள்ளனர்.
இதற்கிடையே, திபெத்தில், கடல் மட்டத்திலிருந்து, 4,411 மீட்டர் உயரத்தில், டாவோசெங் யாடிங் என்ற இடத்தில், விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
விரைவில் பணிகள் முடிய உள்ள இந்த விமான நிலையம், உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள, விமான நிலையமாக கருதப்படும்.
ஏற்கனவே, திபெத்தில், லாசா, காங்கர், பாங்டா, ஜிகாஸ், என்காரி ஆகிய ஐந்து இடங்களில், விமான நிலையம் உள்ளது. இதில் பாங்டா விமான நிலையம் தற்போது உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள விமான நிலையமாக கருதப்படுகிறது. இந்த விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து, 4,334 மீட்டர் உயரத்தில் உள்ளது.