வேட்டி கட்டிய இந்தியருக்கு துபாய் ரயிலில் அனுமதி மறுப்பு!

dubai_metrorail_001துபாயில் வேஷ்டி அணிந்து சென்ற இந்தியருக்கு அந்நாட்டு மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இது குறித்து அவரது மகள், அந்நாட்டு நீதிமன்றத்தில், ரயில் நிலைய அதிகாரிகளுக்கெதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த மதுமதி. துபாயில் வசித்து வருகிறார். இவரை காண, மதுமதியின் தந்தை அடிக்கடி துபாய் செல்வது வழக்கம்.

இந்நிலையில், 67 வயதான மதுமதியின் தந்தை நேற்று துபாயில் உள்ள எதிசலாத் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வேஷ்டி அணிந்து சென்றார்.

ரயில் நிலைய அதிகாரிகள், அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், அவருடன் சென்ற மதுமதி அதிர்ச்சி அடைந்தார்.

தந்தையை தடுப்பதற்கான காரணம் கேட்டபோது, அவர் வேஷ்டி அணிந்திருப்பதால் ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், வேஷ்டி, இந்தியர்களின் பாரம்பரிய உடை என்றும் சுற்றுலா பயணிகளுக்கு துபாயில் உடைக்கட்டுப்பாடு இல்லை என்றும் மதுமதி அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.

மதுமதியின் பேச்சை சற்றும் மதிக்காத ரயில் நிலைய அதிகாரிகள், அவரை கடைசி வரை ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கவில்லை.

அதிகாரிகளின் செயலால் மனமுடைந்த மதுமதியும் அவரது தந்தையும், செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமலே மீண்டும் வீடு திரும்பினர்.

இதையடுத்து, ரயில் நிலைய அதிகாரிகளின் செயலை கண்டித்து கருத்து தெரிவித்துள்ள மதுமதி, தன் தந்தை பல முறை வேஷ்டி அணிந்து துபாய் சாலைகளில் நடந்து சென்றுள்ளதாகவும், ரயிலிலும் பயணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளுக்கு உடைக்கட்டுப்பாடு இல்லாத நிலையில் இந்தியர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட துபாய் ரயில் நிலைய அதிகாரிகள் மீது மதுமதி அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.