இஸ்லாமாபாத் : எல்லை பகுதியில் நிலவும் பதற்ற நிலை குறித்து, பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், அவசரக்கூட்டத்தை கூட்டி நேற்று விவாதித்தார்.
காஷ்மீரின், பூஞ்ச் பகுதியில், இரண்டு நாட்களுக்கு முன், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த, பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய வீரர்கள் மீது, தாக்குதல் நடத்தினர்.
இதில், இந்திய ராணுவ வீரர்கள், ஐந்து பேர் இறந்தனர். காஷ்மீரின் யூரி பகுதியில், நேற்று முன்தினம், ஊடுருவிய பாக்., ராணுவத்தினர், அங்கு முகாமிட்டிருந்த இந்திய வீரர்கள் மீது, தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும், அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவங்கள், இந்திய பார்லிமென்ட்டில், புயலை கிளப்பியுள்ளது.
இதனால், இரு நாட்டுக்கிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க, அவசரக் கூட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஏற்பாடு செய்திருந்தார்.
சவுதி அரேபிய பயணத்தை முடித்து, இஸ்லாமாபாத் திரும்பிய, நவாஸ் ஷெரீப், வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசனை நடத்தினார். எல்லை நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த நவாஸ், “”இருதரப்பினரும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும்,”என, வற்புறுத்தினார்.