ஈரானுக்கு யுரேனியம் விற்க ஜிம்பாப்வே ரகசிய ஒப்பந்தம்

-ஈரானுக்கு அணு ஆயுதம் தயாரிக்க உதவும் மூலப்பொருளான யுரேனியத்தை விற்க ஜிம்பாப்வே ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக லண்டனில் இருந்து வெளிவரும் “டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் ஈரான் பல ஆண்டுகளுக்கு முன் கையெழுத்திட்டது. இதற்காக, ஏராளமான நிதியுதவிகளைப் பெற்றது.

எனினும், அதற்கு மாறாக ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் மீது பொருளாதாரத் தடைகளையும் அவை விதித்துள்ளன. ஆனால், மின்சார உற்பத்திக்காகவே அணு உலைகளை அமைத்துள்ளதாக ஈரான் கூறி வருகிறது. அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாகவே சர்வதேச நாடுகள் அஞ்சுகின்றன.

இந்நிலையில், சர்வதேசத் தடைகளை மீறி ஈரானுக்கு யுரேனியத்தை விற்க ஜிம்பாப்வே ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

“”ஈரானியர்களுக்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்த நகலை நான் பார்த்தேன். இந்த ஒப்பந்தம் எனக்குத் தெரியாமலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

அரசின் மேல் நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அது குறித்துத் தெரியும்” என்று ஜிம்பாப்வே சுரங்கத்துறை துணை அமைச்சர் கிஃப்ட் சிமானிகிரே கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானதாகத் தெரிகிறது. இதனிடையே, மனித உரிமை மீறல்கள், தேர்தல் முறைகேடுகள் போன்றவை காரணமாக ஜிம்பாப்வே மீதும் சர்வதேசத் தடைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்நாட்டில் கடந்த மாதம் பல்வேறு முறைகேடு புகார்களுக்கு இடையில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் முகாபே மீண்டும் வெற்றி பெற்றார். அவர் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை வெளிப்படையாக ஆதரித்தார்.