பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பூடான், அதிலிருந்து மீண்டு வருவதற்குத் தேவையான உதவி அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
பூடானுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலர் சுஜாதா சிங் ஆகியோர் பூடான் பிரதமர் ஷெரிங் டாப்கேவை வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது, “இந்தியாவால் முடிந்த அனைத்து உதவிகளும் பூடானுக்கு அளிக்கப்படும். பூடானுடன் இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது’ என்று மேனன் கூறியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பூடானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஷெரிங்குக்கு மேனன் வாழ்த்து தெரிவித்தார். பூடானில் வெற்றிகரமாக ஜனநாயக ரீதியில் ஆட்சி மாறியதை மேனன் பாராட்டினார்.
பூடானுக்கு வருகை தந்ததற்காக இந்தியப் பிரதிநிதிகளுக்கு ஷெரிங் நன்றி தெரிவித்தார்.
11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பூடானுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங், ஷெரிங்குக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்காக தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் ஷெரிங் தெரிவித்தார்.
பூடானின் தற்போதைய பொருளாதார நிலையை மேம்படுத்த 11-வது ஐந்தாண்டு திட்டம் போதுமானது அல்ல. எனவே, பொருளாதார ஊக்குவிப்பு எனும் புதிய திட்டத்தை ஷெரிங் அறிமுகப்படுத்தியுள்ளார். மேனன் மற்றும் சுஜாதா சிங் ஆகியோர் பூடான் மன்னர் வாங்ஷுக்கையும் சந்தித்தனர்.
பூடானில் கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஷெரிங்கின் மக்கள் ஜனநாயகக் கட்சி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.