மனிதர்களின் ஆயுளை கண்டறியும் சோதனை: பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

BA60818ஒருவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிரோடு இருப்பார் என்பதைக் கூறக் கூடிய “இறப்பை அறியும் சோதனை’யை பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே முதன் முறையாக இந்தச் சோதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருக்கும் அனீடா ஸ்டெஃபனோவ்ஸ்கா, பீட்டர் மெக்கிளிண்டாக் ஆகியோர் இந்தச் சோதனைக்கான காப்புரிமையைச் சமீபத்தில் பதிவு செய்தனர். இதன்படி, கைக்கடிகாரம் போன்ற சாதனத்தின் மூலம் மனிதர்களின் தோல் மீது வலியில்லாத லேசர் ஒளிக்கற்றை பாய்ச்சப்படும்.

இது, உடலில் உள்ள எண்டோதீலியல் செல்கள் எனப்படும் உட்புற செல்களை ஆராய்ந்து, வயது அதிகரிக்கும்போது குறிப்பிட்ட நபரின் உடல் எப்போது சிதைவுறும் (இறப்பு) என்பதை மதிப்பிடும். இந்த செல்கள் ரத்த நாளங்கள் உள்ளிட்ட உள் உறுப்புகளில் காணப்படுகின்றன.

லேசர் ஒளிக்கதிர் பாய்ச்சப்படும்போது இந்த செல்களில் ஏற்படும் அதிர்வுகளை மதிப்பிடுவதன் மூலம் தங்களால் குறிப்பிட்ட நபர் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ முடியும் என்று கூற முடியும் என மேற்கண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்கக் கூடிய ஆபத்து குறித்தும் கூற முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்தச் சோதனையை டாக்டர்களால் எளிதில் பயன்படுத்தத் தக்க தொழில்நுட்பம் அடுத்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்பட உள்ளது. இத்தொழில்நுட்பத்தைக் கொண்டு பல்வேறு மனிதர்களின் ஆயுள்காலத்தை அறிந்து ஒரு தகவல் பெட்டகம் உருவாக்க முடியும் என்று நம்புவதாக விஞ்ஞானி ஸ்டெஃபனோவ்ஸ்கா தெரிவித்தார்.