டெக்ரான்: ஈரானில், நகர சபை உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றும், அழகிய உடலமைப்பை பெற்ற காரணத்தால், அந்நாட்டு பெண்ணுக்கு, நகராட்சி தலைவர் பதவி மறுக்கப்பட்டு உள்ளது.
ஈரான் நாட்டில் உள்ள, குவாஸ்வின் நகரில், நகர சபை தேர்தல் நடந்தது. இதில், நீனா ஸ்யாக்கலி மொராதி, 27, என்ற பெண் வேட்பாளரும் போட்டியிட்டார்.
கட்டுமானவியல் துறையில் பட்டம் பெற்ற மொராதி, தன் நண்பர்களின் துணையுடன், மக்களிடம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அதன் பயனாக, 10 ஆயித்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று, மொராதி, குவாஷ்வின் நகரின் ஒரு பகுதியிலிருந்து, நகர சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, அந்த நகர சபை தலைவருக்கான தேர்தல் நடந்தது. மொராதி, தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செய்தார்.
எனினும், மொராதி மிகவும் அழகாக இருப்பதால், அவரது மனு நிராகரிக்கப்படுவதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தேர்தல் பிரசாரத்தின்போது, மொராதி, இஸ்லாமிய சட்ட விதிமுறைகளை பின்பற்றவில்லை.
அதனால் அவர், தலைவர் பதவிக்கு தகுதியானவர் அல்ல’ என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நகர சபை உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “தொண்டாற்ற, தலைவர் தேவையே தவிர, அலங்கார பதுமைகள் தேவையில்லை’ என்றார்.