எகிப்தில், தலைநகர் கெய்ரோவில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிருந்துகொண்டு வெளியில் வர மறுத்துவந்த அல் ஃபட்டா பள்ளிவாசலுக்குள்ளே இராணுவத்தினர் அதிரடியாக நுழைந்து அனைவரையும் இன்று மாலை அகற்றிவிட்டனர்.
பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.
முன்னதாக, பள்ளிவாசலின் மினாரட் கோபுரத்தின் உச்சியில; ஏறியிருந்தவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு பள்ளிவாசல் வளாகத்துக்குள் புகுந்த இராணுவத்தினர் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் வெளியேறிய சிலர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து, மற்றவர்கள் வெளியேற மறுத்துவந்தனர்.
இதனிடையே, எகிப்தில் கடந்த 24 மணிநேரத்தில் 173 பேர் மோதல்களில் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேபோல் எகிப்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளர்களை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இவர்களில் அல்கைதா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் சவாஹிரியின் சகோதரரும் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை நடந்த போராட்டங்களின்போது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சு இவர்கள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியை சட்டபூர்வமாக கலைத்துவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுவருவதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டவர்களில், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான மொஹமட் பாடியின் மகனும் அடங்குகிறார்.
முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் இன்று முதல் ஒருவார காலத்துக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது நிஜ துப்பாக்கி ரவைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை கூறியுள்ளார்.
அதேவேளை, போராட்டக்காரர்களையும் அமைதி காக்குமாறும் பழிவாங்கல் நோக்கோடு செயற்பட வேண்டாம் என்றும் நவி பிள்ளை கேட்டுக் கொண்டுள்ளார்.
எகிப்தில் முதன்முதலான ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மொஹமட் மோர்ஸி, கடந்த மாதம் இராணுவ சதி மூலம் அகற்றப்பட்டார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மோர்ஸியை மீண்டும் பதவிக்குகொண்டுவருமாறு முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி தொடர்ந்தும் நடத்திவரும் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. -BBC