இளவரசி டயானாவை கொலை செய்தது பிரிட்டன் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் என்று வெளியான புதிய தகவல் குறித்து லண்டனின் ஸ்கார்ட்லாந்து யார்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
1997 ஆகஸ்ட் 31-ம் தேதி டயானா தனது நண்பர் டோடி அல்-ஃபயதுடன் பாரீஸில் காரில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து 16 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், டயானா மரணம் தொடர்பான சர்ச்சைகள் ஓயவில்லை.
இந்நிலையில், பிரிட்டன் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால்தான் டயானா கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவல் உண்மையானது தானா என்பது குறித்து விசாரணை நடத்த ஸ்கார்ட்லாந்து யார்டு போலீஸின் உயரதிகாரி சர் பெர்னார்ட் ஹோரன்-ஹவ் ஒப்புதல் வழங்கியுள்ளார். எனினும் இப்போது நடைபெறுவது டயானா மரணம் பற்றிய முழுமையான மறுவிசாரணை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸில் டயானாவும் அவரது நண்பர் அல்-ஃபயதும் பயணித்த காரை புகைப்படக்காரர்கள் வேகமாக பின்தொடர்ந்தனர்.
இதனால் டயானா பயணித்த காரின் டிரைவர் ஹென்றி பால் அதிவேகமாகச் சென்றார். அப்போது சுரங்கப்பாதையில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் டயானா, அல்-ஃபயத், டிரைவர் ஹென்றி ஆகியோர் உயிரிழந்தனர். அல்-பயதின் பாதுகாவலர் மட்டும் உயிர் பிழைத்தார்.
டயானா, இளவரசர் சார்லஸின் மனைவியாவார். கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார்.
டயானா மரணம் குறித்த புதிய தகவல் தொடர்பாக அவரது மகன்களும், பிரிட்டன் இளவரசர்களுமான வில்லியம், ஹாரி ஆகியோர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.