தலைமையின் பலவீனம் கண்டு வெட்கப்படுகிறோம், மகளிர் தலைவி

கெராக்கான் மகளிர் தலைவர் டான் லியான் ஹோ, கெராக்கான் தலைவர் கோ சூ கூனைப் பெயர் குறிப்பிடாமலேயே கடுமையாகச் சாடினார்.

“தலைமை பலவீனமாக இருப்பதாக பழித்துரைக்கப்படுவதைக் கண்டு வெட்கப்படுகிறோம்”, என்றாரவர். இன்று கெராக்கான் மகளிர் பேராளர் மாநாட்டில் தலைமையுரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தலைமை பலவீனமாக இருப்பது  “சுவரில் எழுதப்பட்ட எழுத்தாக” தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தலைவர்கள் அதை மறுக்கக்கூடாது என்றாரவர். 

“பதவி இறங்குவது அவசியம் என்றால், பதவி இறங்கத்தான் வேண்டும். வீண் பிடிவாதம் வேண்டாம். மக்கள் ஒரு தலைவரை நிராகரிக்கிறார்கள் என்றால் அவர்களின் முடிவை மதிக்க வேண்டும்.”

கிரிக் எம்பியுமான டான், பிஎன்னையும் விடவில்லை. கடந்த பொதுத் தேர்தலிலிருந்து அது பாடம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டது என்றவர் சாடினார்.

“12வது பொதுத் தேர்தல் தோல்வியிலிருந்து நாம் பாடம் கற்கவில்லை. பிஎன்னில் எல்லாமே ஒருமித்த கருத்துத்தான் என்று கூறப்பட்டாலும் அப்படி எதுவும் அங்கு இல்லை.”

பங்காளிக்கட்சிகள் திமிருடன் நடந்துகொள்வதாகவும் பேராசைபிடித்து ஒன்று மற்றதன் இடங்களைப் பிடிங்கிக்கொள்ளப் பார்ப்பதாகவும் சண்டையிட்டுக்கொள்வதாகவும் ஒன்று மற்றொன்றுக்குக் குழிபறிக்க முயல்வதாகவும் அவர் சாடினார்.

எல்லா உறுப்புக் கட்சிகளும் “வெற்றிபெறும் வேட்பாளர்கள்” குறித்து முடிவுசெய்யும் பொறுப்பை பிஎன் தலைமையிடம் விட்டுவிட வேண்டும் என்றாரவர்.

அண்மையில் சிவில் உரிமை சீரமைப்புகளை அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப்  பாராட்டிய டான், பிரதமர் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி சட்டத்திலும் சீரமைப்புச் செய்து பல்கலைக்கழகக் கல்வியாளர்களும் மாணவர்களும் அரசியலில் பங்கேற்கவும்  வகைசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

TAGS: