எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தலைவர் கைது

egypt-brotherhoodகெய்ரோ: எகிப்து நாட்டில், சமீபத்திய கலவரங்களுக்குக் காரணமான, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

எகிப்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வாதிகாரியாக இருந்த, ஹோஸ்னி முபாரக், 2011ம் ஆண்டு, ஏற்பட்ட மக்கள் புரட்சி மூலம், பதவி விலகினார். முஸ்லிம் சகோதர அமைப்பைச் சேர்ந்த முகமது முர்சி, ஜனநாயக முறையில் நடந்த தேர்தல் மூலம் அதிபரானார்.

கடந்த மாதம், 3ம் தேதி, ராணுவப் புரட்சி மூலம், “முர்சி’ ஆட்சி கலைக்கப்பட்டது. எகிப்து தலைமை நீதிபதி, முகமது மன்சூர் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்று உள்ளார்.

முன்னாள் அதிபர் முர்சி, ராணுவக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இதைக் கண்டித்து, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தலைநகர் கெய்ரோவில், முர்சி ஆதரவாளர்கள், முகாமிட்டு, தொடர் போராட்டம் நடத்தினர். இவர்களைக் கலைந்து போகும் படி, அரசு பலமுறை வற்புறுத்தியது. இதற்குப் போராட்டக்காரர்கள் செவி சாய்க்காததால், ராணுவத்தினர், புல்டோசர் மூலம் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அப்புறப்படுத்தினர்.

இதனால், போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்துக்கும், கடந்த வாரம், மோதல் மூண்டது. இதில், 850 பேர் பலியாயினர். இந்தச் சம்பவத்தால், நாடு முழுவதும் பதற்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதைச் சமாளிப்பதற்காக, எகிப்தின் இடைக்கால அரசு, ஒரு மாதத்துக்கு அவசர நிலையை அறிவித்து உள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்திய, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியைச் சேர்ந்த, 1,000க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தக் கட்சித் தலைவர், முகமது பேடியின் மகன் கலவரத்தில் கொல்லப்பட்டதால், இந்தக் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தத் திட்டமிட்டு உள்ளனர். இதனால், இந்தக் கட்சியைத் தடை செய்ய, இடைக்கால அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கிடையே, தலைமறைவாக இருந்த, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர், முகமது பேடி, நேற்று, கைது செய்யப்பட்டார். பலத்த பாதுகாப்புடன், அடையாளம் தெரியாத இடத்தில் அவர் சிறை வைக்கப்பட்டு உள்ளார்.