பதவி துறக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கோ நிராகரித்தார்

கெரக்கான் தலைவர் கோ சூ கூன், பதவி துறக்குமாறு தமக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோட்களை நிராகரித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தல் வரையில் தாம் பதவியில் இருக்கப் போவதாக அவர் சொன்னார்.

“நான் அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை வழி நடத்த எண்ணியுள்ளேன். என் பதவியைப் பொறுத்த வரையில் நான் போட்டியிடுவேனா இல்லையா என்பதை பின்னர் அறிவிப்பேன்”, என கோ கட்சித் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

கெராக்கான் மகளிர் பிரிவு ஆண்டுப் பொதுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார்.

மகளிர் பிரிவுத் தலைவி  தான் லியான் ஹோ தமது கொள்கை உரையில் கோவின் தலைமைத்துவம் மிகவும் பலவீனமாக இருப்பதாகச் சாடினார்.

கோ தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் விலக வேண்டும் என தான் நிருபர்களிடம் விளக்கினார்.

தான் – உடைய விமர்சனங்களினால் கவலைப்படாத கோ, தலமைத்துவக் கூட்டங்களில் பெரும்பாலும் தான் கலந்து கொள்வதில்லை என சாடினார். அதனால் தவறான கருத்துக்களைத் தெரிவிக்கிறார் என கோ சொன்னார்.

“அவர் அடிக்கடி மத்திய செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தால் அவருக்கு என்ன நடக்கிறது என்பது தெரிந்திருக்கும். நாங்கள் செய்த முடிவுகளை அறிந்திருப்பார்.

“அவர் இது கூட்டுத் தலைமைத்துவம் என்பதை உணர வேண்டும்”, என மத்திய செயற்குழுவில் தான் அங்கம் பெற்றுள்ளதை கோ நினைவு கூர்ந்தார்.

உறுதியான முடிவுகளை எடுக்கும் ஆற்றல் கோ-வுக்கு இல்லை என தான் கூறிக் கொள்வது பற்றிக் கருத்துரைத்த கெரக்கான் தலைவர், தமது சொந்தக் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமை உண்டு என்றார்.

“நான் நடப்பு தேசியப் பேராளர் மாநாட்டுக்கு பின்னர் உறுதியான முடிவுகளை எடுக்கப் போகிறேன். அதனை அவர் ஜீரணிக்க முடியும் என நான் நம்புகிறேன்.”

கட்சியின் எதிர்காலம், தேர்தல் வேட்பாளர்கள், தமது சொந்த நிலை ஆகியவை பற்றி அந்த முடிவுகள் இருக்கும்”, என கோ தெரிவித்தார்.

“அந்த முடிவை அனைவரும் விரும்ப வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துவதற்காக நான் இங்கு இல்லை.”

கிரிக் எம்பி-யான தான் அடுத்த பொதுத் தேர்தலில் கைவிடப்படுவாரா என்னும் கேள்விக்குப் பதில் அளித்த கோ, “நான் ஏற்கனவே அறிவித்ததற்கு மாறாக வேறு எந்த அறிவிப்பையும் முன் கூட்டியே செய்ய விரும்பவில்லை”, எனச்  சொன்னார்.

தாம் பழி வாங்கும் குணமுடையவர் அல்ல எனக் கூறிய அவர், 1999ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தம்மைக் கடுமையாக விமர்சனம் செய்த இருவரை சட்ட மன்ற வேட்பாளர்களாக நிறுத்தியதை நினைவு கூர்ந்தார்.

“நான் குறுகிய புத்தியுள்ளவன் அல்ல. கட்சி நலன் என் உள்ளத்தில் பதிந்துள்ளது.”

தாம் பலவீனமான தலைவர் என சொல்லப்படுடுவது பற்றியும் கருத்துரைக்க கெரக்கான் தலைவர் மறுத்து விட்டார். “என்னைப் பற்றி நானே சொல்லிக் கொள்வது நன்றாக இருக்காது என நான் நினைக்கிறேன்.”

நாளை கெரக்கான் கட்சியின் 40வது ஆண்டுப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது கோ, கொள்கை உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: