சர்வதேச விண்வெளி மையத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட போது நிகழ்ந்த திகில் சம்பவம் குறித்து இத்தாலி வீரர் லூகா விவரித்துள்ளார்.
இத்தாலியை சேர்ந்த விண்வெளி வீரர் லூகா பர்மிட்டானோ(வயது 36).
இவர் தனது 2வது விண்நடையை தொடங்கிய உடனேயே, 2வது விநாடியே தான் எந்தத் திசையில் போகிறோம் என்பது அவருக்குப் புரியவில்லை.
மேலும் விண் நிலையத்தை மீண்டும் வந்தடைவோமா என்ற சந்தேகமும் வந்து விட்டதாம்.
இது குறித்து லூகா தனது அனுபவங்களை பிளாக்கில் விவரித்துள்ளார்.
அவர் கூறுகையில், எனது பேக்-பேக்கில் இருந்த ஆக்ஸிஜன் மற்றும் நீர் சிலிண்டர்களில் இருந்து, நீர் எப்படியோ அதிகளவில் ஹெல்மட்டுக்குள் புகுந்துவிட்டது.
அது ஹெல்மட்டுக்குள் நிரம்பி எனது மூக்கு வரை வந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை.
கடுமையாகப் போராட நேரிட்டு விட்டது. எனது தலையை அசைத்து மூக்கில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற பெரும்பாடுபட்டேன்.
என்னால் சரியாக மூச்சு விட முடியுமா என்ற சந்தேகமும் வந்து விட்டது. உயிரோடு திரும்பி விண்வெளி மையத்துக்குள் நுழைவோமா என்ற சந்தேகமும் வந்துவிட்டது.
தன்னுடன் நடையில் உடன் வந்த அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் காசிடியையும், விண்வெளி மைய மிஷன் கட்டுப்பாட்டு அறையையும் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால் அவரது மைக்கையும் நீர் மூழ்கடித்துவிட்டதால் அவரல் குரல் உடன் வந்தவர்களுக்குக் கேட்கவில்லை. யாரும் அவர் பேசுவதைக் கேட்கவும் முடியவில்லை. இதனால் பாதை மாறி விண்வெளி மையத்தைவிட்டு வேறு திசையில் நகர்ந்துள்ளார்.
என்ன செய்வது என்றும் தெரியவில்லை. வேகமாக விண்வெளி நிலையத்துக்குப் போய் விட்டால்தான் நல்லது என்று மட்டும் தோன்றியது.
எப்படியும் கமாண்டர் காசிடி வந்து என்னைக் காப்பாற்றி விடுவார் என்று மட்டும் தோன்றியது. ஆனால் அவர் வரும்வரை எப்படி சமாளிப்பது என்பது பிரச்சினையாகி விட்டது.
என்னிடமிருந்த கேபிள் ரீகாயில் மெக்கானிசத்தைப் பயன்படுத்தி சரியான திசைக்கு திரும்பினேன்.
விண்வெளி மையத்துக்குள் நுழைந்து கதவை சாத்தியவுடன் ஹெல்மட்டின் சேப்ட்டி வால்வை திறந்து கொஞ்சம் தண்ணீர் வெளியேற்றினேன்.
வேறு வழியில்லாவிட்டால் எனது ஸ்பேஸ் சூட்டில் ஓட்டை போடுவதைத் தவிர வழியில்லை. அதுதான் கடைசி முயற்சி என்று நான் நினைத்தேன்.
ஆனால் அப்படிச் செய்தால் நான் இறை மோட்சத்தை அடைந்து விடுவேன் என்றும் பயந்தேன். ஆனால் அதற்குள் என்னுடன் வந்த வீரர்கள் என்னை நெருங்கி விட்டனர்.
என் நினைவு தப்பத் தொடங்கிய நிலையில், விண்வெளி மையத்திற்குள் இருந்த பிற வீரர்கள் அவசரமாக செயல்பட்டு என் ஹெல்மட்டையும் கழற்றினர். இதனால் தப்பினேன் என்று எழுதியுள்ளார்.
இதனையடுத்து இவரது ஹெல்மட்டில் எப்படி தண்ணீர் வந்தது என்பது குறித்து நாசா தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த மாதம் நடந்த இப்பிரச்னையை தொடர்ந்து, அமெரிக்க வீரர்களின் விண்நடைகளுக்கு நாசா தடை போட்டது குறிப்பிடத்தக்கது.