ரசாயன ஆயுதத் தாக்குதல் மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்: பான் கி-மூன்

sgbankimoonசிரியாவில் நடந்த ரசாயன ஆயுதத் தாக்குதல் மனித குலத்துக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ராணுவத்தினர் நடத்திய ரசாயன தாக்குதலில் நூற்றுக் கணக்காணவர்கள் உயிரிழந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து காலம் தாழ்த்தாமல் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.நா. சபையின் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:

சிரியாவில் நடந்த ரசாயனத் தாக்குதல் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. உலகில் ரசாயனத் தாக்குதலை யார் நடத்தினாலும் அது மனித குலத்துக்கு எதிரான குற்றம். அது, சர்வதேச சட்டங்களை மீறுவதாகும். இதுபோன்ற தாக்குதல்கள் சர்வதேச நாடுகள் முன் உள்ள சவாலாகும். அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.

இது குறித்து விசாரிக்க, ஐ.நா.வின் படை வலிமை குறைப்பு விவகாரங்களின் தூதுவர் ஏஞ்செலா கேனை டமாஸ்கஸ்க்கு உடனடியாகச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

உண்மையைக் கண்டறிவதற்கான இந்த வாய்ப்பை இரு தரப்பினரும் (அரசு மற்றும் அரசு எதிர்ப்புப் படையினர்) மறுக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

சிரியாவில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று ரஷியா ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பான் கி-மூன் இவ்வாறு தெரிவித்திருப்பது சிரிய அதிபர் பாஷர் அல்-அஸாதுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அது குறித்து விசாரிக்க உளவு அமைப்புகளுக்கு அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் ராணுவத்தினர் கடந்த புதன்கிழமை நடத்திய ரசாயனத் தாக்குதலில் 1300 பேர் இறந்ததாக எதிர்க்கட்சியான சிரியாவின் தேசிய கூட்டணி குற்றம் சாட்டியது. ஆனால், இக்குற்றச்சாட்டை அரசு தரப்பு மறுத்துள்ளது.