அமெரிக்காவில் கறுப்பின இளைஞர்கள் பலர் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக 18 மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ட்ரேவொன் மார்ட்டின் என்ற இளைஞனின் தாய் கூறுகிறார்.
புளோரிடா மாகாணத்தில் உள்ளூர் கண்காணிப்பு தொண்டர் அதிகாரி ஒருவரால் நிராயுதபாணியாக இருந்த ட்ரேவொன் மார்ட்டின் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆனால் குறித்த தொண்டர் அதிகாரி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளமையால் அமெரிக்காவில் வாழும் ஆப்ரிக்க- அமெரிக்க இளைஞர்கள் அச்சத்தில் உள்ளதாக மார்ட்டினின் தாயான சப்ரினா ஃபுல்டோன் கூறினார்.
தனக்கு அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிட்டதாக உணர்கின்ற ஒருவர், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதத்தை தற்பாதுகாப்புக்காக பயன்படுத்த முடியும் என்கின்ற சட்டம் புளோரிடாவிலும் மற்றபல அமெரிக்க மாகாணங்களிலும் உள்ளது.
இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று சப்ரினா ஃபுல்டோன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க சிவில் உரிமை செயற்பாட்டாளர் மார்ட்டின் லூதர் கிங் நடத்திய நகர ஊர்வலத்தின் 50வது ஆண்டு நிறைவாக சனிக்கிழமை வாஷிங்டன் நகரில் நடக்கவுள்ள பேரணியிலும் சப்ரினா ஃபுல்டோன் உரையாற்றுகிறார்.
17 வயதான இளைஞன் ட்ரேவொன் மார்ட்டினை துப்பாக்கியால் சுட்ட ஜோர்ஜ் சிம்மர்மன் கடந்த மாதம் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தமை குறிப்பிடத்தக்கது. -BBC