இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு கடந்த ஜூலை மாதம் 22-ம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இளவரசர் ஜார்ஜ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கேட் கர்ப்பமாக இருந்த காலத்தில் இருந்தே உலக நாடுகளில் இருந்து ஏராளமான பரிசுப் பொருட்கள் குவியத்தொடங்கின. குழந்தைப் பிறந்த பிறகும் பரிசுப் பொருட்களின் வரத்து குறையவே இல்லை; மாறாக கூடிக்கொண்டே போகிறது.
இவ்வளவு பரிசுப் பொருட்களையும் வைத்து என்ன செய்வது? என்று புரியாத வில்லியம்-கேட் தம்பதியர் தற்போது அப்பொருட்களை அனுப்பியவர்களுக்கே நன்றி அறிவிப்புடன் மீண்டும் திருப்பி அனுப்ப தொடங்கியுள்ளனர். இதற்கென, கென்சிங்டன் அரண்மனை பணியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வகைவகையான துணிமணிகள், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் போன்ற பரிசுகள் ஒருபக்கம் குவிந்துள்ளன. மற்றொரு பக்கம் உலக நாடுகளில் உள்ள பிரபல சுற்றுலா சொகுசு விடுதிகளில் தங்குவதற்கான அழைப்புகள், ரோல்ஸ் ராய்ஸ், ஆடி போன்ற பிரபல கார் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை அனுப்புவதாக அறிவித்துள்ள அன்புத் தொல்லைகள் ஆகியவற்றால் குட்டி இளவரசர் இப்போதே திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், பரிசுகளை அனுப்பி வைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் கடிதங்களுடன் அவை மீண்டும் அனுப்பியவர்கள் முகவரிக்கே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. திருப்பி அனுப்புவதற்கான தபால் கட்டணம் அதிகமாகும் பட்சத்தில் அந்த பரிசுப் பொருட்கள் இங்கிலாந்தில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
பரிசுகள் தவிர, குட்டி இளவரசர் ஜார்ஜ் பிறந்ததற்கு வாழ்த்து செய்திகளை அனுப்பிய அன்பர்களுக்கும் வில்லியம்-கேட் தம்பதியர் நன்றி தெரிவித்து கடிதங்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர்.