மாஸ்கோ: சிரியாவில் உள்நாட்டு போர் கடந்த 3 ஆண்டாக நடந்து வருகிறது. இது தற்போது தீவிரமடைந்துள்ளது.சமீபத்தில் நிகழ்ந்த ரசாயன ஆயுதத் தாக்குதலில் ஏராளமானோர் பலியான சம்பவம் உலகளாவிய கண்டனத்துக்குள்ளாகி உள்ளது.
சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. இதற்கு ரஷ்யா எதிப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோ, அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆபத்தான விளைவுகள் ஏற்படுத்தும்:அப்போது, சிரியாவில் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, அந்நாட்டு விவகாரத்தில் தலையிட அமெரிக்கா தயாராகி வருவதாக, அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படிப்பட்ட முயற்சி எதையும் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கையை அவர் விடுத்தார்.
சிரியாவில் நேரிடக் கூடிய புதிய ராணுவ தலையீடானது, மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மற்றும் வட ஆப்பிரிக்க மண்டலத்திலும் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று எச்சரித்தார்.
சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்ற அமெரிக்காவில் உள்ள சில சக்திகளின் விருப்பமானது, ஐ.நா.சபைக்கு வெளியே ஒரு அமைதி மாநாட்டை நடத்த அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து மேற்கொண்டு வரும் முயற்சியை வலுவிழக்கச் செய்துவிடும்.சிரியாவுக்கு எதிராக ராணுவ நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்போரின் நெருக்கடிக்கு பணிந்து, கோபமூட்டும் நடவடிக்கையில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எல்லா விதத்திலும் சிரியா அரசை குற்றம்சாட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன், கிளர்ச்சியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏமாற்றுவேலைதான், ரசாயன குண்டுகள் வீசப்பட்ட சம்பவம். அதற்கு மலைபோல் ஆதாரங்கள் உள்ளன என்று ஜான் கெர்ரியிடம் லாவ்ரோ விளக்கிக் கூறினார். இவ்வாறுஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.