கௌதம புத்தரின் அன்ன பாத்திரம் என்று கூறப்படும் ஒரு பாத்திரத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து பெற்று வரவேண்டும் என்று இந்தியாவின் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரகுவன்ஷ பிரசாத் சிங் என்பவர் இந்திய அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.
புத்தபெருமான் தான் பரிநிர்வாணம் (ஞானம்) அடைவதற்கு முன்னதாக இந்தப் பாத்திரத்தை பயன்படுத்தியதாக கூறும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர், புத்த மதம் செழித்திருந்த கனிஷ்கரின் காலப்பகுதியில், இந்தப் பாத்திரம் வைசாலியில் இருந்து அவரின் தலைநகரான புருஷபுத்ரா அதாவது தற்போதைய பெஷாவர் நகருக்கு போனதாகவும், அங்கிருந்து அது காந்தகாருக்கு போயிருக்கும் என்றும் கூறுகிறார்.
தற்போது அந்தப் பாத்திரம் காபூல் தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அது குறித்து அருங்காட்சியகத்தின் இயக்குனர் உமராகான் மசூதி கூறுகையில், ” கருங்கல்லினால் ஆன இந்தப் பாத்திரம், மிகவும் பெரியது என்றும், கனமானது என்றும் அதன் அடியில் தாமரை பொறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்.
ஆப்கானிஸ்தானில் பௌத்தம் செழித்திருந்த காலத்தை இந்தப் பாத்திரம் சேர்ந்தது என்றும், பின்னர் ஆப்கானுக்கு இஸ்லாம் வந்தபிறகு அதில், இஸ்லாமிய விடயங்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்றும், ஆகவே அந்தப் பாத்திரத்தின் உண்மையான சரித்திரத்தைக் கண்டறிய கார்பன் டேட்டிங் சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
”நீரை சேமித்து வைக்கவோ, தானமாகப் பொருட்களை சேமித்து வைக்கவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இது போன்ற பாத்திரங்களில் வைக்கப்படும் பொருட்கள் பிறகு புத்தருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். புத்தரின் அன்ன பாத்திரம் என்று கூறுப்படும் இந்த குறிப்பிட்ட பாத்திரம் புத்தரால் நேரடியாக பயன்படுத்தப்பட்டது கிடையாது. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு துறவிக்கு இது கொடுக்கப்பட்டது. ஆனால் இது புத்தரின் பாத்திரம் என்று கூறி கொடுக்கப்பட்டது. இதுதான் வரலாற்று ரீதியான தொடர்பு. பெரிதும் சிரிதுமாக பல பாத்திரங்கள் புத்த துறவிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அப்படி கொடுக்கப்படும் பாத்திரங்கள் புத்தரின் பாத்திரங்கள் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை புத்தர் நேரடியாக பயன்படுத்தவில்லை.” என்று பாரிஸ் நகரின் சோபோன் பல்கலைக் கழகத்தின் மத்திய ஆசிய கலை மற்றும் தொல்லியல் துறை பேராசிரியரான, ஒஸ்மாண்ட் போபியாராச்சி கூறுகிறார்.
காபூலின் தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்தப் பாத்திரத்தின் உண்மைத்தன்மை ஐயமின்றி நிருபிக்கப்பட்டால் மாத்திரமே இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று இந்திய அரசு கூறியுள்ளது. -BBC