சிரியா மீது ராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷியாவுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இதன் உச்சக்கட்டமாக ஆகஸ்ட் 21ஆம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதியில் ரசாயனக் குண்டுகள் வீசப்பட்டன.
இதில் 1,600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அந்நாடுகள் முடிவு செய்துள்ளன. எனினும், “சிரியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம். அதனால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்’ என ரஷ்யா எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக அமெரிக்க அரசியல் விவகாரத் துறை இணை அமைச்சர் வெட்னி ஷெர்மன், சிரியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் போர்ட் ஆகியோர் இந்த வாரம் ஹேக் நகரில் ரஷிய குழுவினரைச் சந்தித்துப் பேசுவதற்கு திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை இந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரஷியா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமான உறவையே விரும்புவதாக மேலும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹர்ப் கூறியது: சிரியாவில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஐ.நா. நிபுணர் குழுவுக்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணியை மேற்கொள்வர். இருப்பினும் சிரியா ராணுவம் தொடர்ந்து முட்டுக்கட்டையில் ஈடுபட்டு வருகிறது என்றார்.
ரஷியா கண்டனம்: பேச்சுவார்த்தையை ஒத்திவைத்த அமெரிக்காவின் செயல் வருந்தத்தக்கது என ரஷிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஜென்னடி காடிலோவ் டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிரியாவில் ரசாயன குண்டுகளை வீசியது சிரிய ராணுவம்தான் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என ரஷிய பிரதமர் புதின், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
சொந்த நாட்டு மக்களையே ரசாயன குண்டு வீசி தாக்கிக் கொன்றதாக கூறப்படுவது கேலிக்கூத்தாக உள்ளது. இச்செய்தி முட்டாள்தனமானதும் கூட என சிரியா அதிபர் அசாத்தின் பேட்டியை ரஷிய நாளிதழ் பிரசுரித்துள்ளது.
“சிரியா மீதான ராணுவ நடவடிக்கையின் விளைவு பயங்கரமாக இருக்கும். சர்வதேச சட்டத்துக்குள்பட்டு அனைத்து நாடுகளும் நடக்க வேண்டும்’ என ரஷியா மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.
தாக்குதல் நடத்தினால் சந்திக்கத் தயார்: எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலிட் அல் மவுலீம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ரசாயன குண்டு வீசியதின் பின்னணியில் சிரிய ராணுவம் உள்ளது என்பதை மறுத்த அவர், ஆதாரம் இருந்தால் அமெரிக்கா அதை வெளியிடட்டும் என்றார்.
“ரசாயன குண்டு வீச்சுக்கு ஆதாரம் உள்ளது’
அப்பாவி பொதுமக்கள் மீது சிரிய அரசு ரசாயன குண்டுகளை வீசியதற்கு ஆதாரம் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே ரசாயன குண்டு வீசப்பட்டதில் 1600 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு வந்த ஐ.நா. குழு மீது சரமாரி குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு குண்டு வெடிப்புச் சம்பவங்களை சிரியா நடத்தி வருகிறது. இதனால் ஐ.நா. குழு ஆய்வு செய்யாது திரும்பியது. இந்தச் செயல்களால் சிரியா மீதான நம்பகத்தன்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி, செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
“”ரசாயன குண்டுகளை சிரியா ரகசியமாக பாதுகாத்து வைத்துள்ளது. ரசாயன குண்டுகளை பயன்படுத்தும் முறையும் சிரியாவுக்கு மட்டுமே தெரியும். ராக்கெட்டின் உதவியோடுதான் ரசாயன குண்டுகளைப் பயன்படுத்த முடியும். இப்படியிருக்கும் நிலையில் கிளர்ச்சிக்காரர்கள் மீது குற்றம் சாட்டுவது பிரச்னையை திசை திருப்புவதற்குதான். ரசாயன குண்டுகளை சிரியா பயன்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்கான ஆதாரம் உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.