சிரியா மீது விரைவில் ராணுவத் தாக்குதல்? அமெரிக்கா தீவிர ஆலோசனை

america_flagசொந்த நாட்டு மக்கள் மீதே ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்திக் கொன்ற சிரியாவின் மீது விரைவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிரியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுதத் தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். எதிர்ப்பாளர்கள் மீது சிரியா அரசு இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இது குறித்து ஐநா விசாரணை நடத்தி வருகிறது.

சிரியாவின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வந்தது.

இந்நிலையில், “”சிரியா மீது வியாழக்கிழமை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது” என்று அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்பிசி செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அதற்கு தகுந்தாற்போல், மத்தியதரைக் கடலின் கிழக்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க கடற்படை வேறு பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. கடற்படையில், ஏவுகணைகளை ஏவும் நீர்மூழ்கிக் கப்பல்களும் இருக்கும் என்று கருதப்படுகிறது.

மீண்டும் ஆலோசனை: சிரியாவின் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

“சிரியாவின் மீது நடவடிக்கை என்பது ரசாயன ஆயுதப் பயன்பாட்டைத் தடுக்கத்தான்’ என்று கேமரூன் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் நிகழ்ந்த ரசாயனத் தாக்குதலுக்குப் பிறகு, ஒபாமாவுடன் பிரிட்டன் பிரதமர் 2-வது முறையாக தொலைபேசியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷியா எச்சரிக்கை: சிரியா மீது மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கு நாடுகளில் ஸ்திரத்தன்மை குலைந்து விடும் என்று ரஷியா புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு எதிர்ப்பாளர்களே ரசாயன ஆயுதத் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சிரியாவின் தூதர் பஷார் அல்-ஜஃபாரி குற்றம் சாட்டியுள்ளார்.