சிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் இந்த மாத முற்பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் நச்சுவாயுத்தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்து முடித்த ஐநா இரசாயன ஆயுதப் பரிசோதகர்கள் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்கள்.
அவர்கள் எடுத்துச் சென்றிருக்கும் மண், இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை ஆய்வுகூடங்களில் பரிசோதனை செய்த பின்னர், இன்னும் இரு வாரங்களில் அவர்கள் தமது அறிக்கையை ஐநா தலைமைச் செயலரிடம் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இரசாயன தாக்குதலில் 1400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறி , சிரியாவின் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான தமது தரப்பு வாதத்தை அமெரிக்கா முன்வைத்த சில மணிநேரங்களில், பரிசோதகர்களும் தமது சோதனையை முடித்து வெளியேறியுள்ளனர்.
சிரியாவில் இருந்து ஐநா பரிசோதகர்கள் வெளியேறியிருப்பது, அந்த நாட்டின் மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை எடுப்பதற்கான நடைமுறை மற்றும் அரசியல் தடைகளை நீக்கியுள்ளதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். -BBC