சிரியாவின் நச்சுவாயுத் தாக்குதல் தொடர்பில் ஆதாரம் உள்ளது: அமெரிக்கா

john_kerry_usசிரியாவில் தலைநகர் டமஸ்கஸ்ஸில் கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி அபாயகரமான சரின் நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு தம்மிடம் ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவர்களிடமிருந்து கிடைத்த தலைமயிர் மற்றும் இரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஜோன் கெர்ரி தெரிவித்தார்.

சிரியாவைத் தண்டிக்கும் விதமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ள ஒபாமா, அதற்கு முன்னதாக காங்கிரஸில் அதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேற்று அதிரடியாக அறிவித்தார்.

அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை தாமதமாகின்ற நிலையிலும் எந்தவிதமான தாக்குதலுக்கும் தாங்களும் தயார் என்று சிரிய அரசாங்கம் கூறுகிறது.

ஆகஸ்ட் 21ம் திகதி நச்சுவாயுத் தாக்குதலில் சுமார் 1400 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறிவருகிறது.

ஐநா நிபுணர்கள் ஏற்கனவே சிரியாவில் நச்சுவாயுத் தாக்குதல்கள் தொடர்பான பரிசோதனைகளை பல இடங்களிலும் ஆராய்ந்து முடித்துவிட்டு வெளியேறிவி்ட்ட நிலையிலும், அமெரிக்கா தமது

ஆட்கள் மூலமாக சுயமாக திரட்டிய ஆதாரங்களே தம்மிடம் இருப்பதாகக் கூறியுள்ளது.

கிழக்கு டமஸ்கஸ்ஸிலிருந்து தமக்குக் கிடைத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததன்படி கடந்த 24 மணிநேரத்தில் தமக்கு கிடைத்த முடிவுகள் அங்கு ஸரின் நச்சுவாயுத் தாக்குதல் நடந்திருப்பதையே காட்டுவதாக ஜோன் கெர்ரி கூறினார்.

சிரியா மீது தாக்குதல்களைத் தொடுப்பதற்கு காங்கிரஸ் வரும் 9ம் திகதி கூடும்போது அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

காங்கிரஸில் ஓட்டுக்கு விடுவதாகக் கூறி தாக்குதல் திட்டத்தை அமெரிக்கா பிற்போடுவது வெறும் அரசியல் மற்றும் ஊடக வாய்ச்சவடால் தான் என்று சிரியாவின் துணை வெளியுறவு அமைச்சர் பைஸல் மெக்தாத் கூறினார். -BBC