சிரியா மீது தாக்குதல் நடத்த ஒபாமா முடிவு: நாடாளுமன்ற ஒப்புதலுக்கு காத்திருக்கிறார்

obamaசிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா நாடியுள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸாதை எதிர்த்து 2 ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக அப்பாவி மக்கள் மீது சிரியா ராணுவம் சமீபத்தில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது சர்வதேச அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

அப்பாவி மக்கள் மீது ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்திய சிரியா அரசைத் தண்டிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:

சிரியா நிலவரத்தைக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, அந்நாட்டின் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்துள்ளேன். ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கு அஸாத் அரசைப் பொறுப்பாளியாக்க நம்மால் முடியும் என்று நம்புகிறேன்.

சிரியாவில் நடைபெற்றது மனித கண்ணியத்தின் மீதான தாக்குதலாகும். ரசாயன ஆயுதங்கள் மீது உலக அளவில் தடை விதிக்கப்பட்டதை எள்ளி நகையாடுவது போல் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. அங்கு நடந்த சம்பவங்களை அமெரிக்காவால் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நமது கடமைகளை நாம் நிறைவேற்றியாக வேண்டும். ரசாயன ஆயுதப் பிரயோகம் குறித்து விசாரணை நடத்தினால் மட்டும் போதாது. அதற்குப் பதிலடி கொடுக்கப்பட்டாக வேண்டும்.

சிரியா மீது நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒப்புதலை நான் கோர உள்ளேன். எம்.பி.க்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசியலைத் தாண்டி சில விஷயங்கள் முக்கியமானவை. நாம் ஒரே நாட்டினர் என்ற தகவலை உலகுக்கு அனுப்புமாறு நாடாளுமன்றத்தை நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஒபாமா.

இவ்வாறு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை ஒபாமா நாடிய பிறகு, இது தொடர்பான வரைவுத் தீர்மானம் ஒன்றை வெள்ளை மாளிகை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தது. அதில், சிரியா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்த அதிபருக்கு அங்கீகாரம் அளிக்குமாறு கோரப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தில் காலக்கெடு எதுவும் இடம்பெறவில்லை.

மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக சிரியா மீது தாக்குதல் நடத்த ஒபாமா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரசாயன ஆயுதத் தாக்குதலுக்கு அஸாத் அரசைப் பொறுப்பாக்க பாதுகாப்பு கவுன்சில் முன்வரவில்லை என்று ஒபாமா தனது உரையில் குறைகூறியுள்ளார்.

சிரியா எதிர்க்கட்சிகள் நம்பிக்கை

ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை ஒபாமா நாடியுள்ளது குறித்து சிரியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியின் மூத்த நிர்வாகி சமீர் நஷார் கூறுகையில், “”இது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாதது. எனினும், இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.