முஷாரஃப் மீது கொலைக் குற்றச்சாட்டுகள்

Pervez_Musharrafபாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஒரு பள்ளிவாசலை முற்றுகையிட்ட சம்பவம் இடம்பெற்ற போது, தீவிரவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்த மதகுரு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே காவல்துறையினர் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

தலைநகர் இஸ்லாமாபாதிலுள்ள செம்மசூதிக்குள் பாகிஸ்தானியத் துருப்புகள் அதிரடியாக நுழைந்தபோது நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதில் தீவிரவதாக் கொள்கைகளைக் கொண்டிருந்த இந்த மதகுருவான அப்துல் ரஷீத் காசியும் அடங்குவார்.

புட்டோ கொலையிலும் தொடர்பு?

பாகிஸ்தானை 1999 முதல் 2008 ஆம் ஆண்டு வரை இராணுவத் தலைவராக நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஆண்ட முஷாரஃப் மீது தொடர்ச்சியாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் வரிசையில் கடைசியாக இந்தக் குற்றச்சாட்டு வந்துள்ளது.

வெளிநாட்டில் சுயமாக நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த அவர் இந்த ஆண்டின் துவக்கத்தில் மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார்.

நாட்டின் முன்னாள் பிரதமர் பேனசீர் புட்டோ கொலை தொடர்பாகவும் அவர் வழக்குகளை எதிர்கொள்கிறார்.

பேனசீர் புட்டோ கடந்த 2007 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். -BBC