தன் நாட்டின் மீது அமெரிக்கா நடத்துவதாக அறிவித்துள்ள தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு சிரியா, ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சொந்த நாட்டு மக்கள் மீதே ரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய சிரியா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். இந்த முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அவர் நாடியுள்ளார். நாடாளுமன்றம் அவரது முடிவுக்கு ஒப்புதல் அளித்ததும், சிரியா மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஐ.நா. சபைக்கான சிரியாவின் பிரதிநிதி பஷார் அல்-ஜாஃபரி, ஐ.நா. பொதுச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “சிரியாவுக்கு எதிரான எந்தவிதமான தாக்குதல் (அமெரிக்கத் தாக்குதல்) நடவடிக்கையையும் தடுத்து நிறுத்துமாறும், தமது பொறுப்பைகளை நிறைவேற்றுமாறும் ஐ.நா. பொதுச் செயலாளரை சிரியா அரசு கேட்டுக் கொள்கிறது. சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அமைதியான அரசியல் தீர்வு காண ஐ.நா. சபை உதவ வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை சிரியாவின் அரசு செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது.
அல்-காய்தாவுக்கு ஆதரவு? இந்நிலையில், சிரியாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஃபைசல் முக்தாத் கூறுகையில், “”சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் ராணுவ நடவடிக்கையானது, அல்-காய்தா பயங்கரவாத அமைப்புக்கும் அதைச் சார்ந்துள்ள ஜபாத் அல்-நுஸ்ரா போன்ற அமைப்புகளுக்கும் ஆதரவளிப்பதாக அமையும். மேலும், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது அமெரிக்கர்கள் மீதான கசப்புணர்வை அதிகரிப்பதோடு, ஒட்டுமொத்த மத்தியக் கிழக்குப் பகுதியையும் நிலைகுலையச் செய்யும்” என்று தெரிவித்தார்.
எதிர்ப்பு வலுக்கிறது: சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அமெரிக்கா செய்து வரும் நிலையில், அதற்கு ரஷியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராரவ் திங்கள்கிழமை கூறுகையில், “”சிரியாவுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் சமீபத்தில் வெளியிட்ட ஆதாரங்கள் எங்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இல்லை. சிரியாவில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இணையதளங்களில் வெளியான படங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன” என்றார். சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், “”ஏதோ ஒரு நாடு (அமெரிக்கா) தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்பது எங்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சமூகம் எடுக்கும் எந்த நடவடிக்கையும் ஐ.நா. சாசனத்தின்படியும், சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை நெறிமுறைகளின்படியும் அமைந்திருக்க வேண்டும்.
சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை மேலும் சிக்கலாக்காமல் தவிர்க்கவும், மத்தியக் கிழக்கில் மேலும் பேரழிவு ஏற்படுவதைத் தவிர்க்கவும் இது அவசியம்” என்று தெரிவித்தார்.
சிரியாவுக்கு அரபு நாடுகள் ஆதரவு: இதனிடையே, சிரியாவுக்கு எதிரான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரபு லீக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், ஐ.நா. சபையை வலியுறுத்தியுள்ளனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் சந்தித்துப் பேசிய அவர்கள், சிரியாவில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அந்நாட்டு அரசுதான் பொறுப்பு என்று தெரிவித்துள்ளனர்.
எனினும், மக்கள் மீது விஷவாயுத் தாக்குதல் நடத்தியதற்குக் காரணமானவர்களை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமே தவிர சிரியா மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.
ரசாயனத் தாக்குதல் நடந்தது? சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடங்களில் ஐ.நா. குழு மாதிரிகளைச் சேகரித்துள்ளது. அந்த மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், “”சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் சேகரிக்கப்பட்ட ரத்த மற்றும் முடி மாதிரிகள் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டபோது, சரின் விஷவாயு செலுத்தி தாக்குதல் நடந்தது உறுதியாகியுள்ளது. எனவே, அபாயகரமான ரசாயனத் தாக்குதலை நடத்திய சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும்” என்றார்.