காபூல், செப். 4- ஆப்கானிஸ்தானில் வாழும் இந்து மற்றும் சீக்கிய மக்களுக்கும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் பாராளுமன்ற மேல்சபையில் சிறப்பு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அப்படி தனியாக சிறப்பு இருக்கைகளை ஒதுக்க முடியாது என ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்ட வல்லுனர்கள் மறுத்து விட்டனர்.
இந்நிலையில், வரும் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் இந்து மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் தற்போது 250 ஆக இருக்கும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இனி ஒரு இந்துவும், ஒரு சீக்கியரும் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றம் செயல்படாத வேளைகளில் சில சிறப்பு அறிவிப்புகளை வெளியிடும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி இந்த புதிய அறிவிப்பை ஹமித் கர்சாய் இன்று வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.