தங்கள் ஜனாதிபதியின் தகவல்களை ஒட்டுக் கேட்டதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டுமென பிரேசில் அதிரடியாக அறிவித்துள்ளது.
பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப்பின் டெலிபோன் பேச்சு, மின்னஞ்சல் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனம் என்எஸ்ஏ ஊடுருவி உளவு பார்த்ததாக பிரேசில் குற்றம் சாட்டி உள்ளது.
இதுகுறித்து பிரேசில் உளவுத் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப் மற்றும் மெக்சிகோ ஜனாதிபதி என்ரிக் பெனா நியோட்டோ ஆகியோரின் டெலிபோன் உரையாடல்களை என்எஸ்ஏ ஒட்டுக் கேட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் மின்னஞ்சல்களையும் அமெரிக்க உளவு நிறுவனம் உளவு பார்த்துள்ளது.
இவ்வாறு செய்தது ஏன்? என்பதற்கு அமெரிக்கா முழு விளக்கம் அளிக்க வேண்டுமெனவும், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அடுத்த மாதம் 23ம் திகதி ஜனாதிபதி ஒபாமாவை சந்திப்பதாக இருந்த திட்டத்தையும், ஜனாதிபதி தில்மா ரத்து செய்து விட்டதாக பிரேசில் ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேபோன்று மெக்சிகோவும் விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.