பாகிஸ்தானில் தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் உள்பட 7 பயங்கரவாதிகள் விடுதலை!

Taliban-Fighters1பாகிஸ்தானில் தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் மன்சூர் தாதுல்லா உள்பட 7 பயங்கரவாதிகளை அந்த நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:

ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் வந்திருந்தபோது விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 33 தலிபான் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளுடன் அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் உதவ வேண்டும் என ஹமீத் கர்சாய் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அனைத்து உதவியும் செய்யும் என உறுதியளிக்கப்பட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது பற்றி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறுகையில், சர்வதேச அமைதி என்ற குறிக்கோளை அடைய தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொள்ளும். ஆப்கனில் அமைதியை ஏற்படுத்தவும் அரசு உறுதுணையாக இருக்கும் என்று தாம் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.