சிரிய விவகாரம்: அரபுலீக் அமெரிக்காவை ஆதரிக்கிறது

kerry_arableague_464x261_apசிரிய அரச எதிர்ப்பாளர்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதன் மூலம், சர்வதேச சகிப்பெல்லைக்கோட்டை சிரிய அரசு தாண்டிவிட்டது என்கிற அமெரிக்க நிலைப்பாட்டுடன் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் அனைவரும் முழுமையாக உடன்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்திருக்கிறார்.

பாரிஸில் நடந்த அரபு லீக் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்புக்குப் பிறகு கெர்ரி இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

ரசாயன ஆயுதங்கள் தொடர்பிலான சர்வதேச சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக மட்டுமே சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதாகவும் கெர்ரி கூறினார்.

இவர் இப்படி கூறினாலும், ரசாயன ஆயுதங்களை தான் ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்றே சிரிய அரசு கூறிவருகிறது.

இதற்கிடையே, சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது ஐநா மன்றத்தின் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும் என்று இரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவித் சாரிப் தெரிவித்திருக்கிறார்.

சிரிய விவகாரத்தில் அமெரிக்காவை பிரான்ஸ் ஆதரிக்கிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் மற்ற நாடுகளைப் போல, சிரிய ரசாயன தாக்குதல் குறித்து விசாரித்த ஐநா மன்ற பரிசோதகர்களின் அறிக்கை வெளியாகும் வரை காத்திருக்கவேண்டும் என்று பிரான்ஸும் விரும்புகிறது.

பாரிஸிலிருந்து லண்டன் வரவிருக்கும் ஜான் கெர்ரி இங்கே பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்துப் பேசவிருக்கிறார். -BBC