உடல் பருமனைக் குறைக்க மென்பானங்கள் மீது வரி-இது மெக்ஸிகோவில்

obese_menமெக்ஸிகோவில் மிகப்பெரும் சவாலாக இருக்கும் உடல் பருமன் பிரச்சினையைக் குறைக்க, மென்பானங்கள் மீது வரிவிதிக்க முன்னெடுப்புகள் செய்யப்படுகின்றன.

நாட்டின் அதிபர் என்ஹிக்கே பெங்யா நியட்டோ இதற்கான ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளார்.

இதை மெக்ஸிகோவுக்கான சுகாதார வரி என்றும் அதிபர் வர்ணித்துள்ளார்.

உலகளவில் உடல் பருமன் அதிகளவில் உள்ளவர்கள் வாழும் நாடுகளின் பட்டியலின் இரண்டாம் இடத்தில் மெக்ஸிகோ இருக்கிறது.

fizzy_drinksஅங்கு முன்னெடுக்கப்படும் சமூக மற்றும் நிதிச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக மென்பானங்கள் மீது வரிவிதிப்பது எனும் அதிபரின் முடிவு வந்துள்ளது.

அதிபரின் பிரேரணையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் கரியமில வாயுவை வெளிப்படுத்தும் ஆலைகள் மீது முதல் முறையாக வரிவிதிப்பது, வேலையில்லாதவர்களுக்கு அரசின் உதவிகளை வழங்குவது, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது ஆகியவை உள்ளடங்கியுள்ளன.

எனினும் அதிபரின் பிரேரணைகள் சட்டமாவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் நாட்டின் மாநிலங்களில் பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும். -BBC