சிரியா ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் தாக்குதலை கைவிடத் தயார்: ஒபாமா

obamaசிரியாவின் மீதான ராணுவ நடவடிக்கைக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைப்பது நிச்சயமில்லை என்ற சூழ்நிலையில், “”பஷார் அல்-அஸாத் அரசு, தன்வசமுள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால், அந்நாட்டின் மீதான தாக்குதல் திட்டத்தைக் கைவிடத் தயாராக இருப்பதாக” அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

சிரியா வசமுள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேச கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர அந்நாட்டு அரசை வலியுறுத்துவோம் என்று ரஷியா கூறியதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏ.பி.சி நியூஸ் தொலைக்காட்சிக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா மேலும் கூறியுள்ளதாவது:

நமது தேசிய பாதுகாப்பைக் கருதிதான் ராணுவத் தாக்குதல் நடத்தத் தீர்மானித்தோம். ராணுவ நடவடிக்கை இல்லாமலே தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படுமானால், அதை முதலில் வரவேற்பவன் நான்தான்.

ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் நாம் இவ்வளவு மும்முரமாக இறங்கியிருக்காவிட்டால், சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் சிரியாவின் ரசாயன ஆயுதங்களைக் கொண்டுவரும் பேச்சே எழுந்திருக்காது என்று ஒபாமா தெரிவித்தார்.

சிரியாவிடமுள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ரஷ்யாவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று சிரியா வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளிருந்தே ஒபாமாவுக்கு எதிர்ப்பு: சிரியாவின் மீதான ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்காவின் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி மட்டுமின்றி, ஆளும் ஜனநாயகக் கட்சியிலிருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

தாக்குதலுக்கு ஒப்புதல் கோரி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தால், தேவையானதை விட சுமார் 50 வாக்குகள் குறைவாகவே கிடைக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ஐந்து ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ராணுவத் தாக்குதலுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அறிவித்திருந்தாலும், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.

ஐனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஓரே ஹிந்து நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கப்பார்டு கூறும்போது, “”அமெரிக்காவின் பாதுகாப்புக்கு சிரியாவிடமிருந்து அச்சுறுத்தல் எதுவுமில்லை. தெளிவான நோக்கமோ, சாத்தியமான போர்த்தந்திரமோ இல்லாத இந்த தாக்குதல் திட்டம் ஒரு மாபெரும் தவறு. நாடாளுமன்றத்தில் இதை நான் எதிர்ப்பேன்” என்று தெரிவித்தார்.

சரியும் மக்கள் ஆதரவு: சிரியா மீது தாக்குதல் நடத்தும் அதிபர் ஒபாமாவின் முடிவு பற்றிய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலான அமெரிக்கர்கள் தாக்குதலுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். சி.என்.என்/ஓ.ஆர்.சி நடத்திய கருத்துக் கணிப்பில், ஒபாமாவுக்கு 40 சதவீத மக்களே ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரது வெளியுறவுக் கொள்கை குறித்த முடிவுக்கு இவ்வளவு குறைவான மக்கள் ஆதரவு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை.

கச்சா எண்ணெய் விலை குறைந்தது: சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் அபாயம் இருந்ததால் கடந்த சில நாட்களாக சர்வதேச கச்சா எண்ணெயின் விலை துரிதமாக உயர்ந்து வந்தது.

ஆனால், திங்கள்கிழமை சிரியாவின் ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ரஷிய யோசனையை சிரியா ஆமோதித்துள்ளதால் போர் மேகங்கள் விலகிய உற்சாகத்தில் செவ்வாய்க்கிழமை கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 1.16 டாலர் (சுமார் 74 ரூபாய்) குறைந்து 109.52 டாலர் (சுமார்

7,000 ரூபாய்) ஆகியிருக்கிறது.