சிரியாவில் இருதரப்பும் போர்க்குற்றம் புரிந்துள்ளன!

syria_abdul_majidசிரியாவின் நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அங்கு இரு தரப்புமே போர்க் குற்றங்களிலும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசாங்க படைகள் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், பெருமளவில் பொதுமக்களை கொலை செய்து, மருத்துவமனைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தி, கொத்தணிக் குண்டுகளையும் பயன்படுத்தியதாக ஆணைக்குழு கண்டுபிடித்துள்ளது.

பொதுமக்களை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்யும் நடவடிக்கைகளில் கிளர்ச்சிக்காரர்கள் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் அதற்கான பொறுப்புக் கூற நேரிடலாம் என்ற அச்சமின்றி இருப்பதாகவும், அவர்கள் நீதி முன்பாக நிறுத்தப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

கடந்த மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸாசுக்கு வெளியே இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதில் நடவடிக்கை எடுப்பது குறித்து அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோண் கெரி அவர்கள், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவை ஜெனிவாவில் சந்திப்பதற்கு ஒரு தினம் முன்னதாக இந்த அறிக்கை வந்திருக்கிறது.

நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலை சிரியாவின் அரசாங்கந்தான் செய்திருக்க முடியும் என்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியன வலியுறுத்துகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சிரியா மறுத்திருக்கிறது.

ஒரு லட்சம் பேர் பலி

இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சிரியாவின் நெருக்கடியை கண்காணிக்க ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு, இந்த சுயாதீன விசாரணை ஆணைக்குழுவை 2011இல் உருவாக்கியது.

சிரியாவுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட இந்த விசாரணைக்குழு மே 15 முதல் ஜூலை 15 வரை 258 பேரிடம் பெற்ற சாட்சியங்கள், வீடியோ பதிவுகள் மற்றும் செய்மதிப்படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.

பல மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்த, கடுமையான ஷெல் தாக்குதலாலும், முற்றுகைகளாலும் நகரங்களும் கிராமங்களும் பாதிக்கப்பட்ட, தண்டனை குறித்த அச்சமற்ற நிலையில் ஒட்டு மொத்த படுகொலைகள் நடந்த, ”ஒரு போர்க் களமே சிரியா” என்று அந்த அறிக்கை கண்டுபிடித்துள்ளது.

அரசாங்கப் படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என்றும், சித்ரவதைகள், ஆட்களை பணயம் வைத்தல், கொலை செய்தல், விசாரணை அற்ற மரண தண்டனை நிறைவேற்றல், பாலியல் வல்லுறவு, பாதுகாக்கப்பட்ட பொருட்களை தாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனைகள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதுடன், பயிர்கள் எரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீரும் மறுக்கப்பட்டது.

கொலைகள், உரிய முறையற்ற மரண தண்டனைகள், சித்ரவதை, பணயம் வைத்தல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பொருட்களை தாக்குதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதக்குழுக்களும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டன. பொதுமக்கள் வாழும் இடங்களில் அவை வகைதொகையற்ற வகையில் ஷெல் தாக்குதலும் நடத்தியுள்ளன.

ஒரு சம்பவத்தில், வடக்கு நகரான அலெப்போவில் மத நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டி, ஜிகாதி கிளர்ச்சிக்காரர்கள் ஒரு 15 வயதுச் சிறுவனை பகிரங்கமாக தூக்கில் போட்டுள்ளனர்.

கிளர்ச்சிக்காரர்களும், குர்து தீவிரவாதிகளும் சிறார் போராளிகளை பயன்படுத்தியுள்ளனர்.

2011 மார்ச் மாதத்தில் அதிபர் அசாத்துக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தது முதல், குறைந்தபட்சம் அரசாங்கப் படைகள் மற்றும் அதன் ஆதரவாளர்களால் 8 ஒட்டு மொத்த மனிதப் படுகொலைகளும், கிளர்ச்சிக்காரர்களால் ஒரு மனிதப் படுகொலையும் செய்யப்பட்டதாக அந்த அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

மனிதப் படுகொலைகள்

மேலும் 9 மனிதப் படுகொலைகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இரசாயன தாக்குதல் குறித்து முறைப்பாடுகள் கிடைத்திருந்தாலும், இதுவரை எப்படியான இரசாயனம் அதில் பயன்படுத்தப்பட்டது என்றோ அல்லது அதனை யார் செய்தார்கள் என்றோ தற்போதுள்ள ஆதரங்களை வைத்து அடையாளம் காண முடியவில்லை என்றும் அது கூறுகிறது.

இருதரப்பிலும் உள்ள இப்படியான போர்க்குற்றங்களைச் செய்தவர்கள் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஜெனிவாவில் சந்திக்கவிருக்கும் அமெரிக்க – ரஷ்ய இராஜதந்திரிகளுக்கான தமது செய்தியாக ” இந்த மோதலுக்கு இராணுவ தீர்வு கிடையாது என்றும் ஆயுத உதவிகள் செய்பவர்கள், வெற்றி என்கிற மாயையைத்தான் தோற்றிவிக்க முடியும்” என்றும் அது கூறியுள்ளது. -BBC