மஇகா அதிகாரப்பூர்வமாகப் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறியுள்ளதை அக்கட்சியின் துணைத் தலைவர் எம். சரவணன் மறுத்துள்ளார்.
இது குறித்து கட்சியின் மத்திய செயற்குழு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சரவணன் உறுதிப்படத் தெரிவித்தார்.
“பெரிக்காத்தான் நேசனலில் இணைவது குறித்து மஇகா எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் முதல் நாளிலிருந்தே தெளிவாக இருக்கிறேன்: இது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுதான் முடிவெடுக்கும், ஆனால் அவர்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மஇகா பெரிக்காத்தான் கூட்டணியில் இணைவதற்கு எந்தவொரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்றும், ஒரு அங்கத்துவக் கட்சியாக இணைந்தால் என்னென்ன நடைமுறைகள் இருக்கும் என்பது குறித்து மட்டுமே விசாரித்ததாகவும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
“அப்போது பெரிக்காத்தான் தலைவராக இருந்த முகிதின் யாசின், மஇகா அக்கூட்டணியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். எனவே, அதன் அடிப்படையில் மட்டுமே நாங்கள் விசாரித்தோம்,” என்று அவர் கூறினார்.
மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கும் தக்கியுதினுக்கும் இடையே இன்று இரவு எந்தவொரு சந்திப்பும் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என்றும் சரவணன் தெரிவித்தார்.
“அப்படி ஏதேனும் இருந்தால் தலைவர் என்னிடம் சொல்லியிருப்பார்,” என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, மஇகா பெரிக்காத்தான் நேசனலில் இணைவதற்கு அக்கூட்டணியின் உச்சமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், அக்கட்சியை அதிகாரப்பூர்வமாக இணைப்பதற்கான கடிதத்தை வழங்க இன்று இரவு விக்னேஸ்வரனைச் சந்திக்க உள்ளதாகவும் தக்கியுதின் கூறியிருந்தார்.
கடந்த ஜனவரி மாதம், பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி மஇகாவின் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த போதிலும், அக்கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்து மஇகா மேலிடம் ஆலோசிக்கும் என்று விக்னேஸ்வரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மஇகா பாரிசான் நேசனல் கூட்டணியிலிருந்து வெளியேறக்கூடும் என்ற பேச்சுகள் சில காலமாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில், கட்சியின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்த அதிருப்தி நிலவியது. அதன் அடிப்படையில், அக்கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிப்பதற்கான அதிகாரத்தை பேராளர்கள் கட்சித் தலைமைக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், அம்னோவின் பல தலைவர்கள் இந்த யூகங்களை மீண்டும் மீண்டும் மறுத்துள்ளனர். மஇகாவிடமிருந்து இது குறித்து தங்களுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்றும், அக்கட்சி தொடர்ந்து பாரிசான் கூட்டணியிலேயே நீடிப்பதாகவும் அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் ஸம்ப்ரி அப்துல் காதிர் வலியுறுத்தினார்.
சமீபத்தில் நடைபெற்ற பாரிசான் நேஷனல் தலைவர்களின் பாசறை நிகழ்விலும் மஇகா தலைவர்கள் கலந்து கொண்டனர். இது, அக்கட்சி தொடர்ந்து கூட்டணியிலேயே நீடிக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
-fmt
























