35°C-க்கு மேல் வெப்பம் பதிவானால் பள்ளிகளில் வெளிப்புறச் செயல்பாடுகளை ஒத்திவைக்க அறிவுறுத்தல்

பள்ளி விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தனது கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களின் உடல்நலனைப் பாதிக்கும் வெப்பம் தொடர்பான அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க, வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் வெளிப்புறச் செயல்பாடுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்களுக்கு வெப்ப அயற்சி (heat stress) ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிக்குமாறும், போதிய அளவில் தூய்மையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறும், மாணவர்கள் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்குமாறும் கல்வி நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

நிழற்குடை இல்லாத தங்குமிடப் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதுமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும், வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, அந்தந்தப் பள்ளிகளின் சூழலுக்கு ஏற்ப மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு உடைகளை அணிய சிறப்பு அனுமதி வழங்கப்படலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வெப்ப அலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகள் அவசியம் என அமைச்சகம் கூறியுள்ளது.

குழு A மாநிலங்களில் உள்ள மாணவர்கள் (கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு) ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குத் திரும்புவார்கள்.

குழு B மாநிலங்களில் உள்ள பள்ளிகள் (மலாக்கா, ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர், கோலாலம்பூர், லபுவான் மற்றும் புத்ராஜெயா) வரும் திங்கட்கிழமை வகுப்புகளைத் தொடங்குகின்றன.

இந்த ஆண்டின் முதல் தவணை விடுமுறை நோன்புப் பெருநாள் விடுமுறையுடன் இணைந்து அமைந்துள்ளது.

இன்று அதிகாலை, வானிலை ஆய்வுத் துறை தீபகற்ப மலேசியாவின் 16 பகுதிகளுக்கு நிலை 1 (Level 1) எச்சரிக்கையையும், கெடாவின் மூன்று பகுதிகளுக்கு நிலை 2 (வெப்ப அலை) எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சிஸிற்கு இடைப்பட்ட நிலையில், தொடர்ந்து குறைந்தது மூன்று நாட்களுக்கு நீடித்தால் நிலை 1 எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

நிலை 2 (வெப்ப அலை) எச்சரிக்கை என்பது, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸிற்கு இடைப்பட்ட நிலையில் பதிவாகும் போது விடுக்கப்படுகிறது.

 

 

-fmt