சபா மற்றும் சரவாக்கில் டீசல் விலையை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாகத் தக்கவைக்கும் அரசாங்கத்தின் முடிவை சபா டிஏபி துணைத் தலைவர் சான் புங் ஹின் வரவேற்றுள்ளார். இந்த மானியம் சலுகை அல்ல, மாறாக அங்குள்ள எதார்த்த நிலையையே பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
கோத்தா கினாபாலு நாடாளுமன்ற உறுப்பினரான சான், கிழக்கு மலேசியாவின் புவியியல் சூழல், உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் குறிப்பாக கிராமப்புற மற்றும் உட்புறப் பகுதிகளில் டீசல் வாகனங்களையே பெரிதும் சார்ந்துள்ள தனித்துவமான சவால்களை இந்த நடவடிக்கை அங்கீகரிப்பதாகத் தெரிவித்தார்.
“சபா மற்றும் சரவாக்கில் ஏற்கனவே போக்குவரத்து செலவுகள் அதிகம் என்பதால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் கூடுதலாக உள்ளன. எரிபொருள் விலையில் ஏதேனும் உயர்வு ஏற்பட்டால், அது குடும்பங்கள், சிறு வணிகங்கள் மற்றும் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளை நேரடியாகப் பாதிக்கும்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2025-இல் 2 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த டீசல் மானியச் செலவு, இந்த ஆண்டு 4.6 பில்லியன் ரிங்கிட்டாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது சமச்சீரான வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகவும் சான் குறிப்பிட்டார்.
தற்போது சபா மற்றும் சரவாக்கில் டீசல் விலை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாக உள்ளது. இது தீபகற்ப மலேசியாவின் விலையான 5.52 ரிங்கிட் பாதியை விடக் குறைவாகும்.
நேற்று, எதிர்க்கட்சியான பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி இந்த வில வித்தியாசத்தை விமர்சித்தது. இது தீபகற்ப மலேசியாவில் உள்ள நுகர்வோர் மற்றும் வணிகங்களிடையே அநீதி இழைக்கப்படுவதாக ஒரு எண்ணத்தை உருவாக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்தது.
வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை துணை அமைச்சருமான சான், கிழக்கு மலேசியாவிற்கு 2.15 ரிங்கிட் மானிய விலையைத் தக்கவைக்க பிரதமர் அன்வர் இப்ராஹிம் எடுத்த முடிவை வரவேற்றார்.
பிராந்தியங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு பரந்த தேசிய முயற்சியின் ஒரு பகுதியே இந்த மானியம் என்று சான் கூறினார். இது ஒரு சலுகையாகப் பார்க்கப்படக்கூடாது, மாறாக “மிகவும் மாறுபட்ட சவால்களைக் கொண்ட பிராந்தியங்களில் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான ஒரு அவசியமான நடவடிக்கை” என்று அவர் கூறினார்.
சமீபத்தில், சபா அம்னோ மூத்த தலைவர் சாலே சைட் கெருவாக் கூறுகையில், சாலை அல்லது கடல் வழியாக நீண்ட தூரப் போக்குவரத்தைச் சார்ந்திருக்கும் தளவாடங்களால் சபா மற்றும் சரவாக் ஆகிய இரண்டுமே கட்டமைப்பில் அதிக செலவுகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனால், குறிப்பாக கிராமப்புறங்களில் விநியோகச் சங்கிலிகள் மிகவும் சிக்கலானதாகவும் செலவுமிக்கதாகவும் இருப்பதாக அவர் கூறினார்.
டீசல் இருப்பு வைப்பது மற்றும் கடத்தப்படுவது குறித்த கவலைகள் காரணமாக, ஏப்ரல் 1 முதல், புத்ராஜெயா கிழக்கு மலேசியாவில் வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப டீசல் வாங்குவதற்கு வரம்புகளை விதிக்கவுள்ளது.
-fmt
























