பெர்லிஸில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்; அவர்களிடமிருந்து 510 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

உள்ளூர் சந்தை, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் இந்த போதைப்பொருட்களின் மதிப்பு, சுமார் ரிம 25.5 மில்லியன் மதிப்புடையவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச மலேசியக் காவல்துறையின் (PDRM) போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஒமர் கான் (Hussein Omar Khan), இந்த போதைப்பொருள் கும்பலின் தலைவரைப் பிடிக்க தாய்லாந்து அதிகாரிகளின் உதவியை நாடவுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த வாரம் பாடாங் பெசார் அருகிலுள்ள வாங் கெலியான் மற்றும் காக்கி புக்கிட் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தனித்தனி சோதனைகளில், ஒரு தம்பதி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சுமார் ரிம 25.5 மில்லியன் மதிப்பிலான 510 கிலோ மெத்தாம்பேட்டமைன்(methamphetamine) போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23 முதல் 37 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என்றும், அவர்கள் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுவதாகவும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.

மார்ச் 24 அன்று வாங் கெலியான் பிரதான சாலையில் இரண்டு கார்களில் சென்று கொண்டிருந்த தம்பதியினரையும் மற்றொரு ஆண் சந்தேக நபரையும் முதல் சோதனையின் போது போலீசார் கைது செய்ததாக ஹுசைன் கூறினார்.

“ஆண் சந்தேக நபர் ஒருவர் ஓட்டி வந்த காரை மேலும் சோதனையிட்டதில், மெத்தாம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடங்கிய 500 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கொண்ட 20 சாக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் இன்று பெர்லிஸ் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வாகனத்தை ஓட்டி வந்தவரின் செயல் சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாலும், உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் இருந்ததாலும், ஒரு வாகனத்தின் மீது போலீசார் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

முதல் மூன்று நபர்களின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வாங் கெலியான் பகுதியில் நடத்தப்பட்ட மேலும் இரண்டு சோதனைகளில் மற்ற இரண்டு ஆண் சந்தேக நபர்கள் பிடிபட்டதாக ஹுசைன் தெரிவித்தார்.

“முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் நான்கு ஆண் சந்தேக நபர்களும் மெத்தாம்பேட்டமைன் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் குற்றப் பின்னணி சோதனையில் ஐந்து சந்தேக நபர்களும் ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது,” என்று அவர் கூறினார்.

அவர்கள் அனைவரும் மார்ச் 25 முதல் நேற்று வரை ஐந்து முதல் ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

1988-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பிக்கப் டிரக்குகள் உட்பட ஆறு வாகனங்கள் மற்றும் எட்டு மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் ரிம 566,200 மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த கும்பல் போலீசாரின் கண்காணிப்பில் இருந்த கடத்தல் குழுக்களில் ஒன்று என்றும், எல்லை வழியாக போதைப்பொருள் கடத்துவதில் அனுபவம் வாய்ந்தது என்றும் ஹுசைன் கூறினார்.

இந்தக் குழு பெர்லிஸில் செயல்பட்டு வந்த முக்கிய குழுக்களில் ஒன்றாகும். இவர்கள் வாங் கெலியான் காட்டுப் பகுதிகள் வழியாக மனிதர்களை வைத்து போதைப் பொருட்களைக் கடத்தி வந்ததாக நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களால் சேகரிக்கப்படுவதற்கு முன்பு, போதைப்பொருட்கள் வாங் கெலியான் பிரதான சாலைக்கு அருகிலுள்ள ஒரு கடந்து செல்லும் இடத்திற்கு (transit point) கொண்டு வரப்பட்டன. இந்த விநியோகம் உள்ளூர் சந்தை, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் தெற்குப் பிராந்தியத்திற்காக கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சந்தைக்குச் சென்றிருந்தால் சுமார் 2.55 மில்லியன் பயனாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கும்பலின் தலைவனான 40 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபர் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது. அவரைப் பிடிக்க அங்குள்ள அதிகாரிகளின் உதவியை போலீசார் நாடுவார்கள் என்று ஹுசைன் கூறினார்.