2026 மலேசிய விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்க​ வேண்டும் – சுல்தான் ஷராபுதீன்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக, இந்த ஆண்டு நடைபெறவுள்ள மலேசிய விளையாட்டுகளை (சுக்மா) ஒத்திவைக்குமாறு சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷரபுதீன் இட்ரிஸ் ஷா பரிந்துரைத்துள்ளார்.

ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறவிருக்கும் இந்த விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிக செலவாகும் என்று சுல்தான் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

“தற்போதைய பொருளாதாரச் சூழலில், மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி தீரும் வரையிலும், ஷா ஆலம் ஸ்டேடியம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் வரையிலும் இப்போட்டிகளை ஒத்திவைப்பதே பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்,” என அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு சிலாங்கூர் மற்றும் சிங்கப்பூர் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த ‘சுல்தான் ஆஃப் சிலாங்கூர் கோப்பை’ காற்பந்துப் போட்டியையும் ரத்து செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.

சிலாங்கூர் மாநில செயலகக் கட்டிடத்தில் நடைபெற்ற 15-வது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது ஆட்சியாளர் இதனைத் தெரிவித்தார்.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சுக்மா விளையாட்டுப் போட்டிகள் சிறிய அளவில் நடத்தப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் தௌபிக் ஜொஹாரி இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள மொத்தம் 53 இடங்கள் இந்தப் போட்டிக்காகப் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் 37 விளையாட்டுப் பிரிவுகளில் 474 நிகழ்வுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

-fmt