காவல்துறையின் தகவலின்படி, 309 சந்தேகநபர்கள் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும், இந்த குற்றக் கும்பல்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களையே இலக்காகக் கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
கூட்டு நடவடிக்கையின் போது, பாரஸ்ட் சிட்டியில் அழைப்பு மைய மோசடி கும்பல்கள் தங்களது செயல்பாட்டு தளங்களாக பயன்படுத்தி வந்த 27 அடுக்குமாடி குடியிருப்புகளும், ஐந்து பங்களாக்களும் மீது அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜூலை 15 அன்று நடைபெற்ற ஒரு பெரிய கூட்டு நடவடிக்கையில், ஜொகூர் மாநிலத்தின் Forest City பகுதியில் செயல்பட்டு வந்த இரண்டு இணைய மோசடி கும்பல்கள் முறியடிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் 335 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் சீன நாட்டினர்.
ஜொகூர் காவல்துறைத் தலைவர் அப் ரஹாமான் அர்சாத் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களில் 309 சீனர்கள், 19 இந்தோனேஷியர்கள், 4 மியான்மர் நாட்டினர் மற்றும் 3 மலேசியர்கள் உள்ளனர். இவர்களின் வயது 20 முதல் 58 வரை உள்ளது.
உந்துசான் வெளியிட்ட தகவலின்படி, இந்த கூட்டு நடவடிக்கையின் போது Forest City-யில் உள்ள 27 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 5 பங்களாக்கள் மீது சோதனை நடத்தப்பட்டது. அவை இந்த கால் சென்டர் மோசடி கும்பல்களின் செயல்பாட்டு மையங்களாக பயன்படுத்தப்பட்டு வந்தன.
ரஹாமான் கூறியதாவது:
இந்த நடவடிக்கையின் மூலம் இரண்டு வெவ்வேறு மோசடி கும்பல்கள் முறியடிக்கப்பட்டன. அவர்கள் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி மற்றும் காதல் (Love Scam) மோசடி போன்ற இணைய மோசடிகளில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் முக்கிய இலக்குகள் வெளிநாட்டவர்கள், குறிப்பாக சீனா மற்றும் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.
மேலும், சோதனையின் போது காவல்துறையினர் 313 கணினிகள், 1,557 கைப்பேசிகள், 17 மடிக்கணினிகள் மற்றும் 10 மோடம்களை பறிமுதல் செய்தனர்.
முதல் மோசடி கும்பலில் 279 பேர் இருந்தனர். அவர்கள் காதல் மோசடி மற்றும் கிரிப்டோ முதலீட்டு மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டாவது கும்பலில் 56 பேர் இருந்தனர். அவர்களில் 54 பேர் வெளிநாட்டவர்கள். அவர்கள் வேலைவாய்ப்பு முகவர்களாக நடித்து, போலியான கிரிப்டோ முதலீட்டு வாய்ப்புகளை வழங்கி மக்களை ஏமாற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிலரிடம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
இதுவரை மோசடி மற்றும் செல்லுபடியாகும் அனுமதியின்றி மலேசியாவில் தங்கியிருந்தது தொடர்பாக 23 விசாரணை கோப்புகள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் 14 வழக்குகள் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் (Deputy Public Prosecutor) அனுப்பப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 194 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஹாமான் மேலும் கூறுகையில்:
159 பேர் இன்று ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர்.
மீதமுள்ள 35 பேர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.
மேலும் 9 விசாரணை கோப்புகள், அரசு தரப்பு வழக்கறிஞரின் மேலதிக உத்தரவுக்காக காத்திருக்கின்றன.
இந்த மோசடி கும்பல்களின் முக்கிய தலைவர்கள் இன்னும் தப்பியோடிய நிலையில் உள்ளனர் என்றும், அவர்களை கண்டுபிடிக்க காவல்துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த மோசடி கும்பல்களுக்கு, கடந்த வாரம் மூடப்பட்ட Network School நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
























