சந்தேகநபர் துப்பாக்கியைக் காட்டி பங்காளதேசத் தொழிலாளியை மிரட்டி, ரொக்கப் பணம் மற்றும் உணவுப் பொருட்களோடு தப்பி ஓடினார்.
இன்று அதிகாலை கோலாலம்பூர், தாமான் வாஹ்யூவில் உள்ள பல்பொருள் அங்காடி ஊழியரைத் துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்த நபரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
செந்தூல் காவல்துறைத் தலைவர் பஸ்ரீ சகானி கூறுகையில், தனது பங்காளதேச ஊழியர் அளித்த தகவலின் பேரில், அங்காடி மேலாளர் காலை 10.01 மணிக்கு புகார் அளித்துள்ளார்.
சந்தேக நபர் அலமாரிகளிலிருந்து சில உணவுப் பொருட்களை எடுத்து ஒரு பையில் வைத்துள்ளார். பின்னர் பணப்பரிவர்த்தனை கவுண்டரை அணுகியுள்ளார்.
“அங்கு அன்றைய விற்பனைப் பணம் இருந்த ரொக்கப் பெட்டியைத் திறக்குமாறு பாதிக்கப்பட்ட ஊழியரை மிரட்டியதுடன், துப்பாக்கியைக் காட்டி அவருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கெபோங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் இந்த கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ‘திரெட்ஸ்’ (Threads) தளத்தில் பகிர்ந்து, காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து இச்சம்பவம் பொதுமக்களின் கவனத்தைப் பெற்றது.
கொள்ளையின் போது சந்தேக நபர் சாம்பல் நிற ஹூடி (hoodie) ஆடை மற்றும் காற்சட்டை, கருப்பு நிற MS ஹெல்மெட் அணிந்திருந்ததோடு, கருப்பு நிற ஸ்லிங் பையையும் (sling bag) வைத்திருந்தார் என்று பஸ்ரீ கூறினார்.
மேலும், சந்தேக நபர் WC357T என்ற பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாகவும், மொத்த இழப்பு சுமார் ரிம 1,052 என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து அபாயகரமான ஆயுதத்துடன் கொள்ளையடித்தல் அல்லது கொள்ளையடிக்க முயலுதல் தொடர்பான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 397-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
























