முன்னாள் நீதிபதியை ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) புதிய தலைவராக நியமிக்க மாமன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

முன்னாள் நீதிபதி அப்துல் ஹலீம் அமான் அவர்களை ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) புதிய தலைமை ஆணையராக நியமிக்க மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்க தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், இந்த நியமனம் மே 13 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

“அப்துல் ஹலீமின் பரந்த அனுபவம் மற்றும் உயர்ந்த நேர்மையின் மூலம், ஆட்சிமுறை அதிகாரமளித்தல் முயற்சிகளை வலுப்படுத்தவும், பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் மற்றும் நாட்டின் நலனுக்காக ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது,” என்று ஷம்சுல் கூறினார்..

புதிய ஊழல் தடுப்பு அதிகாரியை நியமிப்பதற்கான முன்மொழிவைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று மன்னரிடம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹலீமின் வளர்ச்சி

ஹலீம் மார்ச் 10, 1957 அன்று மலாக்காவின் கம்போங் அலாயில் பிறந்தார். 1982 இல் மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். பின்னர் 1996 இல் இங்கிலாந்தின்  ஹல் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

மலேசிய நீதித்துறை ஆண்டுப் புத்தகம் 2023 இல் உள்ள அவரது பின்னணித் தகவலின்படி, அவர் 1982 இல் நீதி மற்றும் சட்டத் துறையில் தனது பணியைத் தொடங்கினார், 22 ஆண்டுகாலமாகப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.

இவற்றில் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் (Attorney-General’s Chambers) மூத்த  வழக்கறிஞராகவும் (Federal Counsel), குளுவாங் மற்றும் மூவாரில் நீதிபதியாகவும் (Magistrate), மலாக்கா உயர் நீதிமன்றத்தில் மூத்த உதவிப் பதிவாளராகவும் (Senior Assistant Registrar), மற்றும் பல மாநிலங்களில் அமர்வு நீதிமன்ற (Sessions Court) நீதிபதியாகவும் பணியாற்றிய நியமனங்கள் அடங்கும்.

அவர் உள்நாட்டு வருவாய் வாரியத்தின் (Inland Revenue Board) மூத்த கூட்டாட்சி வழக்கறிஞராகவும், பகாங் மாநில சட்ட ஆலோசகராகவும் மற்றும் தலைமை நீதிபதி அலுவலகத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஹலீம் 2007 இல் உயர் நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டார் மற்றும் மார்ச் 2023 இல் தனது 66 ஆவது வயதில் கட்டாய ஓய்வு பெறும் வரை ஷா ஆலம் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (New Straits Times) செய்தியின்படி, அவர் தலைமை தாங்கிய குறிப்பிடத்தக்க வழக்குகளில் 2015-ஆம் ஆண்டு TV9 நிர்வாகி சம்பந்தப்பட்ட கொலை வழக்கும் ஒன்றாகும். அந்த வழக்கில், அரசுத் தரப்பின் விசாரணை மற்றும் தடயவியல் சான்றுகள் போதுமானதாக இல்லை என்பதைக் கண்டறிந்த அவர், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தார். 2019-ஆம் ஆண்டில், கிள்ளான் “உடலற்ற” (body-less) கொலை வழக்கில் மூன்று நபர்களுக்கு அவர் மரண தண்டனை விதித்தார்.

அதே ஆண்டில், சிலாங்கூர் ஆட்சியாளர் குறித்த கருத்துக்கள் தொடர்பான தேசத்துரோக வழக்கில் போதகர் வான் ஜி வான் ஹுசைன் (Wan Ji Wan Hussin) தாக்கல் செய்த மேல்முறையீட்டை அவர் நிராகரித்தார். மேலும், ஆட்சியாளருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற ருகுன் நெகாரா (Rukun Negara) கொள்கையை மேற்கோள் காட்டி, அவரது சிறைத்தண்டனையை ஒரு ஆண்டாக உயர்த்தி உத்தரவிட்டார்.

2021-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 11 மாதக் குழந்தையான ‘பேபி சாரா’ (Baby Zara) கொலை வழக்கில், அவர் ஒரு நபருக்கு மரண தண்டனை விதித்தார்.