கடந்த சில மாதங்களாக நீடித்த வறண்ட காலநிலை காரணமாக, கிளந்தான், தானா மேரா, கம்போங் புக்கிட் கெச்சிக் பகுதியில் உள்ள சுங்கை அனாக் முரிங் ஆற்றின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது, இது குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளது.
பெர்னாமா அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், ஆற்றின் நீர்மட்டம் சுமார் 3 மீட்டர் சரிந்துள்ளதாகவும், இதனால் ஆற்றின் பெரும்பகுதி தூர்வாரப்படாமல் தரைதட்டித் தெரிவதோடு, நீரோட்டம் மிகவும் குறுகலாக மாறியுள்ளதும் கண்டறியப்பட்டது.
ஆற்றையே தங்களது பிரதான போக்குவரத்துப் பாதையாகவும், வாழ்வாதாரமாகவும் நீண்டகாலமாக நம்பியிருக்கும் கிராம மக்களுக்கு இந்தச் சூழல் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக புக்கிட் கெச்சிக் அண்டை வீட்டுக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நூர் ஹசன் (66) தெரிவித்தார்.
கிராம மக்களின் முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் விவசாய நடவடிக்கைகளையும் இந்த வறட்சி பாதித்துள்ளதாக குடியிருப்பாளர் இஸ்மாயில் ஜூனோ (71) தெரிவித்தார்.
ஆற்று நீர் இருப்பு குறைந்து வருவதால், காய்கறிகள் மற்றும் சிறு பண்ணைகள் போன்ற பயிர்களுக்குத் தொடர்ந்து நீர் பாய்ச்சுவது கடினமாகியுள்ளதாக அவர் கூறினார்.
“மேலும், இதற்கு முன்னர் ஒரு கூடுதல் உணவு ஆதாரமாக இருந்த மீன்பிடி நடவடிக்கைகளும், மீன் வளங்கள் குறைந்து வருவதால் பாதிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
ஆறு தொடர்ந்து ஆழமற்றதாகி வருவதால், முன்பை விட மீன் பிடிப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.























